
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இரவு பார்ட்டி நடந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களா ஒன்றில் பார்ட்டி நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி கிராமர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பார்ட்டியில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.
பார்ட்டியை நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதியும் பெறவில்லை. பங்களாவில் காவல்துறை ரெய்டு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோரின் பிள்ளைகள் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் மதுபாட்டில்கள் அடுக்கி வைத்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக காவல்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரவு 11 மணிக்கு தொடங்கிய பார்ட்டி அதிகாலை வரை நடந்தது.
காவல்துறையினர் அதிகாலை 4 மணிக்கு ரெய்டு நடத்த சென்றபோதும் பார்ட்டி நடந்து கொண்டிருப்பது தெரியவந்தது. பார்ட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால், அவர்கள் வீடியோவை வெளியிட்டது தவறு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரைகுறை ஆடையுடன், மாணவர்கள் நடனம் ஆடுவது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மதுவுடன் சேர்த்து மாணவர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களையும் எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அனுமதி கோரி மாணவர்கள் கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் அதில் பார்ட்டியை யார் நடத்துகிறார்கள் என்ற எந்த விவரமும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பங்களா உரிமையாளர் காலித் கான், தடை செய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்த அயன் கான் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.