முக்கிய இலாகாக்களை கைவசப்படுத்தும் ரணில்!

முக்கிய இலாகாக்களை கைவசப்படுத்தும் ரணில்!

இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே நிதியமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தன் வசம் வைத்திருக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி வன்முறையாக வெடித்தது. இலங்கையின் பொருளாதார சீரழிவுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராடியவர்கள் மீது மகிந்தா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்த்து நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமடைந்தனர். ராஜபக்ச வீடுகள், ஆளுங்கட்சி எம்.பிக்கள் வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் பதவி ஏற்றுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க உலக நாடுகள் உதவ முன் வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களைத் தவிர மற்ற அமைச்சர்கள் நாளை நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் நிதியமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ரணில் விரும்புகிறார். அத்துடன் நிதியமைச்சராக அவர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த பெயர் கல்வி அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய அமைச்சரவை 18 அமைச்சர்களைக் கொண்டிருக்கும் எனவும், பொதுஜன பெரமுனவுக்கு எட்டு அமைச்சர் பதவிகளும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஐந்து அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மீதம் உள்ள பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் அலுவலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in