பிரதமராகிறார் ரணில்? : மகிந்த ராஜபக்ச போட்ட புதிய ப்ளான்!

பிரதமராகிறார் ரணில்? : மகிந்த ராஜபக்ச போட்ட புதிய ப்ளான்!

இங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று அல்லது நாளை பதவியேற்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே இன்று அல்லது நாளை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறுகிய காலத்திற்கேனும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்ச கோரியதாகவும், அவரின் கோரிக்கையை ரணில் விக்ரமசிங்கே ஏற்று பொறுப்பேற்க உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச இடையே ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நேற்று நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ரணில் மற்றும் கோத்தபய ராஜபக்ச இடையே கலந்துரையாடல் இன்று நடைபெறுகிறது.

புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் ரணில் விக்ரமசிங்கேவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் ஏற்கனவே அவருக்கு ஆதரவை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு அந்தப் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதற்கு கோத்தபய ராஜபக்ச மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் ரணில் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in