போர்ச் சூழலிலும் தொடரும் நிறவெறி!

எல்லையில் வெள்ளையர்களுக்குத் தனி வரிசை... இன்னும் சில கசப்புகள்
போர்ச் சூழலிலும் தொடரும் நிறவெறி!

உக்ரைனில் போர் உச்சமடைந்து வருகிறது. இதனால், அதன் அண்டை நாடுகள் வழியே தப்பிச்செல்லும் முயற்சியில் உக்ரனியர்களும் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினரும் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு நெருக்கடியான சூழலிலும், மனிதர்களிடையே நிறம், இனம் சார்ந்த வெறுப்பு நிலவுவது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. ருமேனியா, போலந்து என உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லை வழியே தப்பிச் செல்ல முயற்சிக்கும் ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் நிறவெறியை எதிர்கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

கறுப்பின சகோதரிக்கு நிகழ்ந்த துயரம்

இது தொடர்பாக சிஎன்என் செய்தியாளர் பிஜான் ஹோஸெய்னி ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் தொடர் பதிவுகள், போருக்கு நடுவிலும் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் நிறவெறியைப் பட்டவர்த்தனமாகப் பதிவுசெய்திருக்கின்றன.

பிஜானின் சகோதரி தத்தெடுக்கப்பட்டவர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியர்ரா லியோன் நாட்டைச் சேர்ந்த கறுப்பினத்தவர். இதன் காரணமாகவே, உக்ரைனிலிருந்து வெளியேறும் அவரது பயணம் பல வலிகளை அவருக்குத் தந்திருக்கிறது.

போர் தொடங்கிய நேரத்தில் தலைநகர் கீவில் இருந்த அந்தப் பெண், தனது தோழிகளுடன் அங்கிருந்து வெளியேற முயற்சித்திருக்கிறார். உக்ரைனின் மேற்கில் போலந்து எல்லையில் உள்ள லிவிவ் நகருக்குக் காரில் செல்ல அவர்கள் திட்டமிட்டனர். ஆனால், அங்கிருந்து செல்ல கார் ஓட்டுநர்கள் கிடைக்கவில்லை.

அலைச்சல், அவதி

எப்படியோ ஒரு ஓட்டுநரைத் தேடிக் கண்டுபிடித்து தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டிருக்கிறார்கள். அவர் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள த்னிப்ரோ எனும் நகருக்கு அவர்களை அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருக்கிறார்.

அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயில் அல்லது பேருந்தில் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அந்தப் பயணத்துக்கு 700 டாலர் கேட்டிருக்கிறார் அந்த ஓட்டுநர். நம்மூர் மதிப்பில் அது 53,000 ரூபாய். தோழி ஒருவரின் 13 மாதக் குழந்தை உட்பட 8 பேர் ஒரு சிறிய செடான் காரில் பயணத்தைத் தொடங்கினர். ஆனால், த்னிப்ரோ சென்றடைந்தபோது அங்கு ரயில்களோ பேருந்துகளோ இயங்குவதில்லை எனத் தெரியவந்தது. எனவே, லிவிவ் நகரத்துக்கு அழைத்துச் செல்லுமாறு அந்த ஓட்டுநரிடமே கேட்டிருக்கிறார்கள். அவர் கூடுதலாக 1,500 டாலர்களை வாங்கிக்கொண்டு அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்.

லிவிவ் நகரிலிருந்து எல்லை வரை அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்திருந்த அந்த ஓட்டுநர் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு அவர்களைச் சாலையிலேயே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால், போலந்து எல்லை வரை அவர்கள் நடந்தே சென்றனர்.

கடும் குளிருக்கு நடுவே போதிய உணவு, ஓய்வு இன்றி நடந்து சென்றவர்களால் ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் பொருட்களைச் சுமந்துகொண்டு நடக்க முடியவில்லை. இதனால், பல பொருட்களை சாலையிலேயே விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.

வெள்ளையருக்குத் தனி வரிசை

ஆனால், எல்லையை அடைந்தபோது இன்னும் பல அதிர்ச்சிகள் அந்தப் பெண்ணுக்குக் காத்திருந்தன. போலந்துக்குள் நுழைய இரண்டு வரிசைகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒன்றில் வெள்ளையர்கள், மற்றொன்றில் பிற இனத்தவர். உக்ரைனியர்களுக்கே எல்லையைக் கடக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டது. எல்லையில் குவிந்திருந்த அனைவரும் திறந்த வெளியிலேயே தங்க வேண்டியிருந்தது. சிலர் நெருப்பு மூட்டி அதில் குளிர்காய்ந்து இரவின் குளிரைச் சமாளித்தனர்.

எனினும், மறுநாள் காலை வரிசையில் நின்றபோது அந்தப் பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து ஓர் ஆம்புலன்ஸ் அவரை 4 மைல்கள் தள்ளி கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

கறுப்பினத்தவருக்கு அனுமதி மறுப்பு

மருத்துவமனையில் நலம்பெற்ற அந்தப் பெண் மீண்டும் லிவிவ் நகருக்குத் திரும்பிய அங்கிருந்து போலந்து எல்லைக்குச் செல்ல ஒரு பேருந்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அவருடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்த அவரது தோழிகளும் அந்தப் பேருந்தில் பயணித்தனர். ஆனால், அதிகபட்சம் 2.30 மணி நேரம் பிடிக்கும் அந்தப் பயணம் 24 மணி நேரத்துக்கு நீண்டது. ஆனால், எல்லையை அடைந்தபோது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. கறுப்பினத்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று சொல்லப்பட்டது. இதை எதிர்த்து அந்தப் பெண்ணும் அவரது தோழிகளும் குரல் எழுப்பினர்.

5 மணி நேரக் காத்திருக்குப் பின்னர் எல்லையைக் கடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைப் பற்றி தனது ட்விட்டர் தொடர் பதிவுகளில் எழுதியிருக்கும் பிஜான் ஹோஸெய்னி, “எனது தங்கை அதிர்ஷ்டசாலி. தற்போது ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அங்கு நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவரால் குளிக்க முடிந்தது. மெத்தையில் உறங்க முடிந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் எல்லையில் காத்திருக்கிறார்கள். ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து ஏறத்தாழ 5 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள்” என இறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.