ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு: குவாட் தலைவர்கள் சொன்னது என்ன?

ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு: குவாட் தலைவர்கள் சொன்னது என்ன?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் அமைப்பின் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியப் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குவாட் அமைப்பு நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு என்பதால், ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த மாநாட்டில் முக்கிய இடம்பிடித்தன. இந்த அமைப்பைப் பொறுத்தவரை உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்காத ஒரே உறுப்பு நாடு இந்தியா தான்.

ஏற்கெனவே, இந்தியாவின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு, ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்கள், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்வதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதேசமயம், மறைமுகமான அறிவுறுத்தல்களைத் தாண்டி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அந்நாடுகள் எடுத்துவிடவில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் உறுப்பு நாடுகள் புரிந்துகொண்டதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் வினய் மோகன் க்வாத்ரா, “உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவான நல்ல பாராட்டு தெரிவிக்கப்பட்டது” என்றார்.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான பகைமையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், தூதரக நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in