சிரியா, ஈராக் தீவிரவாதிகளுக்குப் புகலிடமாகும் ஆப்கன்: புதினின் புதிய கவலை

அமெரிக்க இருக்கைக்கு நகரும் ரஷ்யாவால் வரலாறு திரும்புகிறதா?.
தஜிகிஸ்தானின் ஆப்கன் எல்லையில் ரஷ்யா தலைமையிலான துருப்புகள்
தஜிகிஸ்தானின் ஆப்கன் எல்லையில் ரஷ்யா தலைமையிலான துருப்புகள்

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் நெருக்கடிக்கு ஆளாகிவரும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் தருவதாக கவலை தெரிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். ஆப்கனுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் முன்னாள் சோவியத் நாடுகள் பலவும் அவரது கவலையில் பங்கெடுத்திருக்கின்றன. முன்னதாக ஆப்கனை மையப்படுத்திய புவிசார் அரசியல், சர்வதேச தீவிரவாதம் ஆகியவற்றில் கவலைகொண்டிருந்த அமெரிக்காவின் இருக்கையில் தற்போது தவிர்க்க இயலாது ரஷ்யா அமர்கிறது.

ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் புடின்

தோள்சேரும் சோவியத் சகோதரர்கள்

புதன் அன்று (அக்.13) முன்னாள் சோவியத் கூட்டமைப்பு தேசங்களின் பாதுகாப்பு அமைப்புகளுடனான வீடியோ கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் ஆப்கனின் மாறும் அரசியல் நிலவரம், அதன் எல்லைகளில் தங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து உள்ளிட்டவை குறித்து அந்நாடுகள் விவாதித்தன. முன்னாள் சோவியத் நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை ஆப்கன் எல்லை வழியாகத் தங்கள் நாடுகளுக்குள் ஊடுருவும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்கள் குறித்து கவலை தெரிவித்தன.

ஆப்கனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே தங்கள் ஆப்கன் எல்லைகளில், ரஷ்யாவுடன் இணைந்த ராணுவ அணிகளின் பயிற்சிகள் மற்றும் போர் ஒத்திகைகளை இந்த முன்னாள் சோவியத் தேசங்கள் நடத்திவருகின்றன. எல்லைகளில் எவ்வளவு உஷாராக இருந்தும் தங்கள் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் போதை மற்றும் ஆயுதக் கடத்தல்கள் ஊடுருவி வருவதைத் தடுக்க முடியாமல் இந்த நாடுகள் தவித்துவருகின்றன. இதன் பொருட்டு ரஷ்யா தலைமையிலான ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும், ஆப்கனை ஆளும் தாலிபான்களுக்கு அழுத்தம் தரவும் முயற்சிக்கின்றன.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர்
சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர்

வேரடியின் ஈர பிணைப்பு

எல்லைகளின் கடத்தல் தொல்லைகளுக்கு அப்பால், சர்வதேச அடிப்படைவாத தீவிரவாத குழுக்களுக்கு வாசல் திறக்கும் தாலிபான்களின் போக்கு பிராந்தியத்தின் புதிய தலைவலியாக உருவெடுப்பதாக ரஷ்யா தலைமையிலான இந்நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. மேலான பார்வைக்கு அடிப்படைவாத குழுக்கள் பலவும், தாலிபான்களுடன் முரண்பட்டிருப்பது போன்றே தோன்றும். ஆனால் தங்களது சித்தாந்தங்கள், நோக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆழமான பிணைப்பையே இவை கொண்டுள்ளன. நடைமுறை செயல்பாடுகளில் கொண்டிருக்கும் கொள்கை வேறுபாடுகளே தாலிபன் - இதர அடிப்படைவாத குழுக்களுக்கு இடையிலான முரணாக அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன.

உதாரணமாக தாலிபான் படைகளுக்கும் ஐஎஸ் கோராசான் அமைப்புக்கும் இடையே ஆப்கானிஸ்தானில் தற்போது நடந்து வரும் மோதல்கள், இரு அமைப்புகளின் கொள்கை தளபதிகளுக்கு இடையிலான பூசல் மட்டுமே. ஐஎஸ் கோராசான் என்பது சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் பிளவு குழு ஒன்றும், தாலிபான்களில் இருந்து பிரிந்தவர்களும் சேர்ந்து கட்டமைத்த ஆப்கன் அமைப்பாகும். தற்போதைக்கு இந்த குழுக்கள் இடையே மோதல்கள் வெடித்தாலும் விரைவில் அவை ஒரே பாதையில் ஒன்றாக நடைபோடும் என்றே ரஷ்யா கணிக்கிறது.

ஆப்கனில் ஐஎஸ் கோராசான் எதிர் நடவடிக்கையில் தாலிபான்கள்
ஆப்கனில் ஐஎஸ் கோராசான் எதிர் நடவடிக்கையில் தாலிபான்கள்

பாதைகள் வேறானாலும் இலக்கு ஒன்றே

இதே போக்கில் சிரியா மற்றும் ஈராக்கில் களமாடும் தீவிரவாதக் குழுக்கள் தாலிபான்களுடன் தற்போது நட்பைப் புதுப்பித்துள்ளன. அங்கிருந்து பயிற்சி மற்றும் மருத்துவ ஓய்வுக்கான ஜிகாதிகளுக்கு ஆப்கன் அடைக்கலம் தரத் தொடங்கியிருக்கிறது. தாலிபானுடன் தற்போது முரண்பட்டிருக்கும் ஐஎஸ் கோராசான் உட்பட இந்த அடிப்படைவாத குழுக்கள் அனைத்தின் நோக்கமும் ஒன்றுதான். ஷரியத் சட்டம் மற்றும் கலிஃபா ஆட்சியிலான அகண்ட இஸ்லாமிய தேசத்தைக் கட்டமைப்பதே இவற்றின் கனவு. ஆப்கன் எல்லைக்குள் தம்மைச் சுருக்கிக்கொள்ளும் தாலிபான்கள், சகோதர ஜிகாதிகளின் நோக்கத்துக்கு அந்த எல்லைக்குள்ளிருந்தவாறு ஆகமுடிந்த உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறது.

ஆபகனிலிருந்து விடைபெற்ற அமெரிக்க வீரர்கள்
ஆபகனிலிருந்து விடைபெற்ற அமெரிக்க வீரர்கள்

திரும்பும் வரலாறு

இம்மாதிரி உதவி கேட்டு அடைக்கலமான ஒசாமா பின்லேடனுக்கும் அவரது அல் கொய்தா அமைப்புக்கும் அடைக்கலம் தந்ததற்கான விலையை அடுத்த வந்த 20 ஆண்டுகளில் தாலிபான்கள் அனுபவித்தார்கள். தற்போது திரும்பும் வரலாறாக தாலிபான் ஆசியில் ஜிகாதிகளுக்கு ஆப்கன் புகலிடமாவது தொடங்கியுள்ளது. வழக்கமாக இம்மாதிரி மாற்றங்களுக்கு அமெரிக்காவே விரைந்து ஆட்சேபம் தெரிவிக்கும். மாறாக தாலிபான்களுடன் தள்ளி நின்றே அழுத்தம் தருவதுடன் இப்போதைக்கு அமெரிக்கா அடக்கி வாசிக்கிறது.

திரும்பும் வரலாற்றின் இன்னும் சில சுவாரசிய பக்கங்களும் உண்டு. எண்பதுகளில் சோவியத் ஆளுகையிலிருந்து விடுபடுவதற்காகப் போராடிய ஆப்கன் குழுக்களுக்கு பனிப்போர் காரணமாக ஆயுதங்களை அள்ளித் தந்தது அமெரிக்கா. அந்தக் குழுவிலிருந்து பின்னாளில் உதித்ததே தாலிபான் இயக்கம். ஒசாமாவுக்கு அடைக்கலமானதில் அமெரிக்காவின் எதிரியாக பாவிக்கப்பட்ட தாலிபானை காலம் மறுபடியும் நட்பு கட்டத்துக்கு தற்போது தள்ளியிருக்கிறது. அதே காலம் அமெரிக்கா காலி செய்த தாலிபான் எதிர்ப்பு இருக்கையில் தவிர்க்க இயலாது ரஷ்யாவை அமர்த்தியிருக்கிறது.

மார்ச்சில் நடைபெற்ற மாஸ்கோ அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றில் தாலிபான் பிரதிநிதிகள்
மார்ச்சில் நடைபெற்ற மாஸ்கோ அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றில் தாலிபான் பிரதிநிதிகள்

அழுத்தம் பயன் தருமா?

தனது முன்னாள் சோவியத் கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புக்காகவும், பிராந்திய அமைதிக்காகவும், அங்கு தனது வல்லரசு பிம்பத்தை தக்கவைத்துக்கொள்ளவும் தாலிபானின் போக்குக்கு எதிராக ரஷ்யா ஆட்சேபம் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறது.

அவற்றில் முக்கியமாக ஓப்பியம் மற்றும் ஹெராயின் உற்பத்தியில் உலகளவில் முதன்மை வகிக்கும் ஆப்கன் மண்ணில், தாலிபான்களின் தேவைக்காக அதன் வர்த்தக விருத்திக்கான புதிய ஏற்பாடுகளைக் கவலையுடன் ரஷ்யா கவனிக்கிறது.

அதேவேளையில் தாலிபான்களுடன் மோதல் போக்கில் இறங்கவும் ரஷ்யா தயாராக இல்லை. ஆப்கனை நட்பு தேசமாக மதித்து தங்கள் கவலையைப் பகிர்ந்துகொள்ளவும், பேச்சுவார்த்தைகள் மூலம் வழிக்குக் கொண்டுவரவுமே ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் விரும்புகின்றன. இது தொடர்பாக அடுத்த வாரம்(அக்.20) மாஸ்கோவில் நடைபெற உள்ள சர்வதேசளவிலான பேச்சுவார்த்தையில் தாலிபான் தலைவர்களுக்கு அழுத்தம் தரப்படவும் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in