
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்த பின்னர், முதல் முறையாக ரஷ்யாவுக்கு வெளியே பயணிக்கும் அதிபர் புதினால் பரபரப்பு எழுந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நாளை(அக்.12) கிர்கிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதனை கிர்கிஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் உறுதி செய்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி), ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும் .
2022ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய பின்னர் புதின் மிகவும் அரிதாகவே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். உக்ரைன் போர் நடவடிக்கையின் ஊடாக அந்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதான சந்தேகத்தின் பேரில், கடந்த மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதினுக்கு எதிரான கைது வாரண்டை பிறப்பித்தது.
ரஷ்ய அதிபருக்கு எதிரான இந்த கைது வாரண்டை கடுமையாக கண்டித்த ரஷ்யா, தங்கள் மீதான மேற்கு நாடுகளின் விரோதத்திற்கு இதுவே சான்று என குற்றம்சாட்டியது. மேலும் வாரண்ட் பிறப்பித்த நீதிபதிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்கையும் தொடர்ந்தது. புதின் மீதான குற்றச்சாட்டினை ரஷ்யா வன்மையாக மறுத்துள்ளபோதும், ரஷ்யாவுக்கு வெளியிலான அதிபரின் பயணங்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
கிர்கிஸ்தான் ஜனாதிபதி சடிர் ஜபரோவின் அழைப்பின் பேரில் புதினின் விஜயம் அமைவதோடு, போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக நிறுவப்பட்ட ஐசிசியின் அங்கத்தினராக கிர்கிஸ்தான் இல்லாததால் அந்நாட்டில் ஐசிசி பெயரால் சங்கடத்துக்கு வாய்ப்பில்லை. எனினும் மேற்கு நாடுகளின் வெறும் வாய்க்கு, ரஷ்யாவுக்கு வெளியிலான புதினின் சகல பயணங்களும் அவலாக மாறி வருகின்றன.
முன்னதாக ஜி20 மாநாட்டை முன்னிட்டு தனது டெல்லி பயணத்தை புதின் தவிர்த்திருந்தார். அப்போது, பிரேசிலில் நடைபெறவிருக்கும் அடுத்தாண்டு ஜி20 மாநாட்டுக்கு புதின் வந்தால் கைது செய்யப்படுவரா என்பது குறித்து, டெல்லி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக நாட்டுத் தலைவர்கள் கிண்டல்களை எழுப்பியதும் நடந்தது.
கிர்கிஸ்தான் விஜயத்தை தொடர்ந்து, பெய்ஜிங்கில் நடைபெறும் இரு நாடுகள் பேச்சுவார்த்தை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு விஜயம் செய்யவும் இருக்கிறார் புதின். ரஷ்யாவின் நட்பு தேசம் என்பதோடு, ஐசிசி அங்கத்தினராக சீனா இல்லை என்பதால் புதினின் சீன விஜயத்திலும் எந்த சங்கடமும் எழப்போவதில்லை.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!