`புதின் ஒரு போர்க் குற்றவாளி'- ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு

`புதின் ஒரு போர்க் குற்றவாளி'- ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர்க் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இதுவரை வரை உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் தடைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மரியுபோல் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யா குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் தெற்குப் பகுதியான மரியுபோல் நகரை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள் அங்கு தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் மரியுபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக நகர துணை மேயர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. அதே போல், உக்ரைனின் வடக்கு நகரமான செர்னிஹிவ் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் உணவு வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது. போரை நிறுத்துமாறு பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்ய அதிபர் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். முன்னதாக புடினை போர்க் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in