மும்பை, பதான்கோட், புல்வாமா தாக்குதல் குற்றவாளிகளை உபசரிக்கும் பாகிஸ்தான்: ஐநாவில் இந்தியா ஆவேசம்

மும்பை, பதான்கோட், புல்வாமா தாக்குதல் குற்றவாளிகளை உபசரிக்கும் பாகிஸ்தான்: ஐநாவில் இந்தியா ஆவேசம்
பதான்கோட் தாக்குதல்

2008-ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2016-ல் நடந்த பதான்கோட் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். 2019-ல் நடந்த புல்வாமா தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமடைந்தனர். இந்தியாவை உலுக்கிய இந்தப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானிலிருந்து இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகள்.

இந்நிலையில், இந்தச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் பாகிஸ்தான் அரசால் உபசரிக்கப்படுவதாக இந்தியா கடுமையாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.

புல்வாமா தாக்குதல் நினைவுதினமான நேற்று (பிப்.14) ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டி கூட்டம் நடந்தது. பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டியின் தலைவர் எனும் முறையில், ஐநாவுக்கான நிரந்தரத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய ஐநாவுக்கான இந்தியாவின் பிரதிநிதி ராஜேஷ் பரிஹார், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய அந்தத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தக் கூட்டத்தில் தெற்கு ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியா சந்தித்துவரும் பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான அறிக்கையை வாசித்த அவர், “மும்பை, பதான்கோட், புல்வாமா தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என உலகத்துக்கே தெரியும். அந்தக் கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அந்நாட்டின் அரசு ஆதரவையும் உபசரிப்பையும் பெறுகிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்தார்.

அந்தக் கொடூரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், உடந்தையாக இருந்தவர்கள், நிதியளித்தவர்கள் இன்றுவரை சுதந்திரமாக உலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானை பயங்கரவாதச் செயல்களுக்கான மையம் எனக் குறிப்பிட்ட அவர், ஐநாவால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளைப் பாகிஸ்தான் வளர்த்தெடுப்பதாகவும், அந்நாட்டின் தலைவர்கள், பயங்கரவாதிகளைத் தியாகிகள் எனப் போற்றுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

மும்பை தாக்குதல்
மும்பை தாக்குதல்

பல தசாப்தங்களாக, எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற வகையில் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

Related Stories

No stories found.