வெள்ளையினக் காவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஜேஸன் வாக்கருக்கு நீதி கிடைக்குமா?

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் அநீதி
வெள்ளையினக் காவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட
ஜேஸன் வாக்கருக்கு நீதி கிடைக்குமா?

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், தனது குடும்பத்துடன் காரில் சென்ற காவலர் ஒருவர், கறுப்பினத்தவர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம், கறுப்பின மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவல் பணியில் இல்லாத நேரத்தில் அந்தக் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து வெவ்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் காவலர் ஜெஃப்ரி ஹேஷின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்படவிருக்கின்றன.

இந்தச் சம்பவம், வடக்குக் கரோலினா மாநிலத்தின் ஃபேயட்வில் நகரில் ஜனவரி 9-ல் நடந்தது. காவலர் ஜெஃப்ரி ஹேஷ் அந்தச் சமயத்தில் பணியில் இல்லை. தனது மனைவி, மகள் ஆகியோருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையைக் கடந்து தனது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜேஸன் வாக்கர் (37). அந்த நேரத்தில் என்ன நடந்தது எனத் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், ஜேஸன் வாக்கர் ஜெஃப்ரி ஹேஷால் சுட்டுக்கொல்லப்பட்டது மட்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சக அதிகாரிகளை அழைத்த ஜெஃப்ரி ஹேஷ், சாலையின் குறுக்கே ஜேஸன் வாக்கர் திடீரென குறுக்கிட்டதாகவும், அவர் மீது மோதிவிடாமல் இருக்க கார் ப்ரேக்கை அழுத்தியதாகவும் கூறும் காட்சி காணொலியாக வெளியானது.

கார் மீது வந்து மோதிய ஜேஸன் வாக்கர், காரின் முன்புறக் கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த வைப்பரைப் பிடுங்கி, கண்ணாடியை உடைக்கத் தொடங்கியதாகவும், தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே அவரை நோக்கிச் சுட்டதாகவும் ஜெஃப்ரி ஹேஷ் கூறியிருக்கிறார்.

எனினும், எலிஸபெத் ரிக்ஸ் எனும் பெண் உள்ளிட்ட சிலர் அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்ததன் அடிப்படையில் வேறு மாதிரியான தகவல்களைத் தெரிவித்திருக்கின்றனர். கார் நேரடியாக ஜேஸன் வாக்கர் மீது மோதியதாகக் கூறியிருக்கும் எலிஸப்த் ரிக்ஸ், “கார் கண்ணாடி வழியாக ஒருமுறை அவரை நோக்கிச் சுட்ட ஜெஃப்ரி ஹேஷ், பின்னர் காரைவிட்டு வெளியே வந்து மூன்று முறை சுட்டார்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், ஜேஸன் வாக்கரின் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயங்களைத் தாண்டி வேறு காயங்கள் தென்படவில்லை எனக் காவலர்கள் தெரிவித்திருக்கின்றனர். தற்போது விடுப்பு அளிக்கப்பட்டிருக்கும் ஜெஃப்ரி ஹேஷ், இதுவரை கைதுசெய்யப்படவில்லை. அவர் மீது இன்னமும் வழக்குப் பதிவுசெய்யப்படவும் இல்லை.

2020 மே 25-ல் அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தின் மின்னியாபோலிஸ் நகரில், போலீஸ்காரர் ஒருவரால் குரல்வளை நசுக்கப்பட்டு, “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று கதறிக் கதறி உயிர்விட்ட கறுப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம், இனவெறியர்களைத் தவிர மற்ற அனைவரின் கடும் கண்டனத்துக்குள்ளானது. தொடர் போராட்டங்களுக்குப் பின்னர்தான் சம்பந்தப்பட்ட காவலர் டெரேக் சாவின் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in