பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் கையில்... எதிர்ப்புகளுக்கு இடையே இடைக்கால அதிபரான ரணில்!

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் கையில்... எதிர்ப்புகளுக்கு இடையே இடைக்கால அதிபரான ரணில்!

இலங்கை அரசியலில் முக்கியத்திருப்பமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக சபாநாயகர் நியமித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த ஜூலை 9-ம் தேதி கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை கைப்பற்றினர். அங்கிருந்து தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை விமானம் மூலமாக மாலத்தீவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே இலங்கையிலிருந்து தப்புவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் உதவி செய்தார் என்று இன்று காலை முதலே அவருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில் பிரதமர் அலுவலகத்தினையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதால் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று இலங்கை அரசின் தொலைக்காட்சியான ‘ரூபவாகினி’ அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியதால் அதன் ஒளிபரப்பு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

ரணில் பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என மக்கள் தீவிரமாக போராடிவரும் இத்தகைய நிலையில் இலங்கை அரசியலில் முக்கிய திருப்பமாக அவரையே இடைக்கால அதிபராக சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தன அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, “ தேர்தலில் ஒரு இடம் மட்டுமே பெற்ற எம்.பி பிரதமராக நியமிக்கப்படுகிறார். இப்போது அதே நபர் தான் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ராஜபக்ச பாணி ஜனநாயகம். என்ன ஒரு கேலிக்கூத்து. என்ன ஒரு சோகம்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in