சித்திரமும் கானமும்... ஜெர்மனியில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு தந்த இந்தியர்கள்!

சித்திரமும் கானமும்... ஜெர்மனியில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு தந்த இந்தியர்கள்!

2022-ம் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி முதலாவதாக ஜெர்மனி தலைநகர் பெர்லினைச் சென்றடைந்திருக்கிறார். அவருக்கு ஜெர்மன் வாழ் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, ஒரு சிறுமியின் ‘மோடி ஓவிய’மும் ஒரு சிறுவன் பாடிய தேசபக்திப் பாடலும் பிரமரை வெகுவாகக் கவர்ந்தன.

பயணத் திட்டம்

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான ஆலோசனையின் 6-வது கூட்டத்தில் அவருடன் இணைந்து பங்கேற்கிறார். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தக் கூட்டத்தில், இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இரு தலைவர்களும் இணைந்து வர்த்தகக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார்கள். இந்தியா - ஜெர்மனி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு தொடங்கி, 2021-ம் ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் பல்வேறு தளங்களில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியிலிருந்து டென்மார்க் செல்லும் மோடி, தலைநகர் கோபன்ஹேனில் அந்நாட்டின் பிரதமர் மெட்டெ ஃப்ரெடெரிக்ஸனைச் சந்தித்துப் பேசுகிறார். டென்மார்க் ஏற்பாடு செய்திருக்கும் இந்தியா - நார்டிக் இரண்டாவது உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்கிறார். பின்னர் டென்மார்க்கிலிருந்து கிளம்பும் மோடி மே 4-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார். அந்நாட்டின் அதிபராக மீண்டும் தேர்வாகியிருக்கும் இம்மானுவேல் மெக்ரானைச் சந்தித்துப் பேசுகிறார்.

காத்திருந்த இந்தியர்கள்

பயணத் திட்டத்தின்படி இன்று காலை பெர்லினின் பிராண்டென்பர்க் விமான நிலையத்தைச் சென்றடைந்த மோடி, அங்கிருந்து ஆல்டோன் கெம்பின்ஸ்கி ஓட்டலைச் சென்றடைந்தார். அங்கு அவரைச் சந்திக்க ஏராளமான புலம்பெயர் இந்தியர்கள் காத்திருந்தனர்.

அங்கு குழந்தைகளுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. ஒரு சிறுமி மோடியின் உருவத்தை ஓவியமாக வரைந்து அவருக்கு அன்பளிப்பாக அளித்தார். அச்சிறுமியிடம் அன்புடன் உரையாடிய மோடி, “இதை வரைவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாய்?” எனக் கேட்டார், அந்த ஓவியத்தில் கையெழுத்து இட்ட மோடி சிறுமியுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

பின்னர் ஒரு சிறுவன் தேசபக்திப் பாடலொன்றைப் பிரதமர் முன்னிலையில் பாடினான். விரல்களில் சொடுக்குப் போட்டபடி அதை மிகவும் ரசித்த மோடி, சிறுவனை மிகவும் பாராட்டினார்.

முன்னதாக, மோடியைக் கண்டதும் புலம்பெயர் இந்தியர்கள் அனைவரும் ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கீ ஜே’ என உற்சாக முழக்கமிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in