பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கூட ஆன்லைனில் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள்: போப் பிரான்சிஸ் எச்சரிக்கை

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கூட ஆன்லைனில் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள்: போப் பிரான்சிஸ் எச்சரிக்கை

பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் அனுபவம் அல்லது சலனத்தைப் பெற்றிருப்பதாக வாடிகானில் நடந்த ஒரு கருத்தரங்கில் போப் பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது போப் பிரான்சிஸ் இந்த கருத்தினை தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கிறிஸ்தவர்களாக இருப்பதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்களை சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இயேசுவின் ஆசியை ஒவ்வொரு நாளும் பெறும் தூய்மையான இதயம், இத்தகைய ஆபாசத் தகவலைப் பெற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக பேசிய அவர், “டிஜிட்டல் ஆபாசத்தின் அனுபவம் உங்களுக்கு இருந்ததா அல்லது அதற்கு ஆசைப்பட்டுள்ளீர்களா என்று நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்து பாருங்கள். இந்த பழக்கம் பல மக்களுக்கு, பல சாமானியர்கள், பல சாதாரணப் பெண்கள், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்குக் கூட இருப்பது ஒரு தீமை.

நான் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் ஆபாசத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, நீங்கள் நேரடி துஷ்பிரயோக வழக்குகளைப் பார்க்கிறீர்கள். ஆனால் மிகவும் 'சாதாரண' ஆபாசத்தைப் பற்றிச் சொல்கிறேன். அங்கிருந்துதான் பிசாசு நுழைகிறது. இதுதான் பிரம்மச்சார்ய மனதை பலவீனப்படுத்துகிறது. எனவே உங்கள் தொலைபேசியிலிருந்து ஆபாசத்தை நீக்குங்கள். அப்படி நீக்கிவிட்டால் உங்கள் கையில் சலனம் இருக்காது” என்று எச்சரித்துள்ளார்

போப் பிரான்சிஸ் இதற்கு முன்பு ஆபாசத்தை கண்டித்துள்ளார். முன்னதாக ஜூன் மாதம், "இது ஆண்கள் மற்றும் பெண்களின் கண்ணியத்தின் மீதான நிரந்தர தாக்குதல். இது பொது சுகாதாரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in