மோடிக்கு புதின் சொல்லி அனுப்பிய அந்தரங்கத் தகவல்!

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் பகிர்ந்த சுவாரசிய செய்தி
மோடிக்கு புதின் சொல்லி அனுப்பிய அந்தரங்கத் தகவல்!

இந்தியா வந்திருக்கும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சர்வதேச அழுத்தத்தைச் சந்தித்துவரும் நிலையில், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ். 40 நிமிடங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது.

சீனா சென்றிருந்த லாவ்ரோவ் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். இன்று காலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசிய அவர், “இன்றைய சூழலை இந்தியா முழுக்க முழுக்க திறமையாக எதிர்கொண்டிருப்பதுடன், ஒருபக்க சார்பை எடுக்காமல் செயல்படுகிறது. அதை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றார்.

ஜெய்சங்கருடன் பேசிய பின்னர் லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிபர் புதினும் பிரதமர் மோடியும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இந்தியாவில் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து புதினிடம் நான் அறிக்கை அளிப்பேன். பிரதமர் மோடிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் புதின். வாய்ப்பு கிடைத்தால் அதைத் தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் தெரிவிப்பேன்” என்றார். இதன் பின்னர் மாலை, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவின் நிலைப்பாடு

ரஷ்யா விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்கிறது இந்தியா. உக்ரைன் போர் தொடர்பாக இதுவரை ரஷ்யாவை வெளிப்படையாக இந்தியா கண்டிக்கவில்லை. ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் வாக்கெடுப்புகளில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக, கடந்த வாரம் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்தின்போதும் இந்தியா வாக்களிக்கவில்லை. இதன் மூலம், தனது நடுநிலையை இந்தியா உணர்த்தியிருக்கிறது.

உக்ரைன் போர் காரணமாக எழுந்திருக்கும் சர்வதேச நெருக்கடிக்கு நடுவில், அதிக அளவு தள்ளுபடியில் இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க ரஷ்யா விருப்பம் தெரிவித்தது குறித்து ‘ப்ளூம்பெர்க்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை 35 டாலருக்கு இந்தியாவுக்கு விற்க ரஷ்யா ஒப்புக்கொண்டிருப்பதாகவும், 15 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை இந்தியா வாங்கிக்கொள்ள வேண்டும் என ரஷ்யா விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு தரப்பு அரசு மட்டங்களிலேயே நடைபெற்றதையும் ‘ப்ளூம்பெர்க்’ இதழ் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த முடிவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் விமர்சித்திருக்கின்றன. அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மாண்டோ, எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் ஏற்பாடு ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது என்று கூறியிருக்கிறார். ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. முன்னதாக, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கவோ அல்லது வேறு வகையில் உதவவோ முயலும் நாடுகளும் பின்விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என சர்வதேசப் பொருளாதாரத்துக்கான அமெரிக்க தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங்கும் எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே, “ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பா தனது தேவையைவிடவும் 15 சதவீதம் அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்கிறது. நாங்கள் 1 சதவீதம்தான் இறக்குமதி செய்கிறோம்” என்று தனது தரப்பை இந்தியா விளக்கிவிட்டது.

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரியா, கிரேக்கம், மெக்ஸிகோ எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். எனினும், அவர்களுடனான சந்திப்புகளை வெளிப்படையாக ஊடகங்களுக்குத் தெரியும் வகையில் மோடி நடத்தவில்லை. அந்த வகையில் லாவ்ரோவுடனான வெளிப்படையான சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்தியா உணர்த்தியிருப்பதாகவே கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in