உலகம் முழுதும் முடக்கப்படும் ஊடகர்கள்!

கழுத்து நெரியும் கருத்துச் சுதந்திரம்
உலகம் முழுதும் முடக்கப்படும் ஊடகர்கள்!

ஹாங்காங்கில், ‘ஸ்டாண்ட் நியூஸ்’ எனும் சுயாதீன ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்ட செய்தியுடன் 2021-ம் ஆண்டு நிறைவுபெற்றிருக்கிறது. சர்வதேசப் பார்வையாளர்களின் ஒட்டுமொத்தப் பார்வையும் குவிந்திருக்கும் இடமான ஹாங்காங்கில் நடந்த இந்த நிகழ்வு, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘ஸ்டாண்ட் நியூஸ்’ இணைய ஊடகத்தின் முதன்மை ஆசிரியர் பாட்ரிக் லாம், முன்னாள் இயக்குநர்களான டென்ஸி ஹோ, மார்கரெட் ஆங் உள்ளிட்ட 6 பேர் டிச. 29-ம் தேதி காலையில் கைதுசெய்யப்பட்டனர். ஹாங்காங் காவல் துறையின் பிரிவான, தேசியப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடியாக அந்த அலுவலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். இதையடுத்து, அந்த ஊடக நிறுவனம் இனி செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்னர் ‘நெக்ஸ்ட் டிஜிட்டல்’ ஊடகக் குழுமமும், அது நடத்திவந்த ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழும் இப்படியான நடவடிக்கையால் முடக்கப்பட்டன.

ஹாங்காங் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள்
ஹாங்காங் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள்

ஹாங்காங்கில் கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவிக்கக் கோரி அமெரிக்கா, கனடா முதல் ஐநா வரை பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்திருக்கின்றன. அது, சீன அரசாலும் ஹாங்காங் நிர்வாகத்தாலும் செவிமடுக்கப்படுமா என்பது வேறு விஷயம். ஆனால், கடந்த ஆண்டில் உலகம் முழுதும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்டது ஊடகத் துறையினர் மீதான அடக்குமுறைகள் அதிகரித்திருப்பதை உணர்த்தியிருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

488 ஊடகர்கள் கைது

ஊடகச் சுதந்திரத்தின் நிலை குறித்து, ‘எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள்’ (Reporters without border) அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் 488 ஊடகர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இது, 2020-ம் ஆண்டை ஒப்பிட 20 சதவீதம் அதிகம். 46 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 65 பேர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் மீதான நெருக்கடியும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண்கள் 60 பேர். இது முந்தைய ஆண்டை ஒப்பிட 33 சதவீதம் அதிகம். கருத்துச் சுதந்திரமும் மனித உரிமையும் மறுக்கப்படும் நாடுகளில்தான் ஊடகர்களின் நிலை மிக மோசம். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலை நீடிக்கிறது.

2019-ல் நைஜீரியாவின் கடூனா மாநிலத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காகக் கைதுசெய்யப்பட்ட லூக்கா பினியாத், இன்றுவரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரே பைஸ் எனும் யூடியூபர், உக்ரைன் விவகாரம் தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டதற்காக, அரசின் ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில், 2020-ல் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

2020 ஆகஸ்ட் மாதம் பெலாரஸ் நாட்டில் நடந்த தேர்தலுக்குப் பின்னர், அங்கு நிலவிய அரசியல் பதற்றத்தில் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களுடன், பல பத்திரிகையாளர்களும் கைதுசெய்யப்பட்டனர். 2021 பிப்ரவரியில், ராணுவ ஆட்சியின்கீழ் சென்றுவிட்ட மியான்மரில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஹாங்காங்கில் ஜனநாயகக் குரல்களை நசுக்குவதில் இறுதிவெற்றியை நோக்கி நகரும் சீனாவும், ஹாங்காங் நிர்வாகத்தின் மூலம் பத்திரிகையாளர்கள் மீது குறிவைத்திருக்கிறது. அதற்குச் சமீபத்திய உதாரணம் ‘ஸ்டாண்ட் நியூஸ்’ பத்திரிகையாளர்கள் கைது.

எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, சீனாவில் ஊடகத் துறையின் பின்னடைவைக் காட்டுகிறது. சீனாவின் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்துவரும் ஹாங்காங்கில், தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளைச் சீனா மேற்கொள்கிறது. ஒருகாலத்தில் ஊடகச் சுதந்திரம் வலுவாக இருந்த ஹாங்காங்கில், இப்போது நிலைமை படுமோசமாகியிருக்கிறது. 2002-ல், ஊடகச் சுதந்திரத்தின் அடிப்படையில், எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட பட்டியலில் 18-வது இடத்தில் இருந்த ஹாங்காங், 2020-ல் 80-வது இடத்துக்கு வந்துவிட்டது. மொத்தம் 180 நாடுகள் அடங்கிய அந்தப் பட்டியலில், சீனா 177-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட ரஷ்ய யூடியூபர் ஆண்ட்ரே பைஸ்
கைதுசெய்யப்பட்ட ரஷ்ய யூடியூபர் ஆண்ட்ரே பைஸ்

வழக்கம்போல் தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் அடக்குமுறை ஆட்சியாளர்கள், கடந்த 2 ஆண்டுகளாகவே கரோனா பெருந்தொற்றுப் பரவலை ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். தங்கள் செயல்பாடுகளை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களைக் குறிவைப்பதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனும் பேதமெல்லாம் கிடையாது. ஆளுங்கட்சிகள் சட்டத்தைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களை முடக்குவதுடன், தங்கள் ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வேலைகளையும் செய்கின்றன. எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களும் அதற்குச் சளைத்தவர்கள் அல்ல.

கருத்துரிமைக்குப் பெயர் பெற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்தச் சூழல் நிலவுகிறது. ஸ்பெயினில், குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள், செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாத வகையில் தடைவிதிக்கப்பட்டிருப்பது ஓர் உதாரணம். 2014 முதல் ஐரோப்பிய நாடுகளில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை ‘ஒன் ஃப்ரீ பிரஸ் கொயெலிஷன்’ எனும் அமைப்பு தொடர்ந்து பதிவுசெய்துவருகிறது. ஈரான், சூடான், சிரியா, மெக்ஸிகோ என உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தப் பிரச்சினை உண்டு.

நம்பகமான செய்திகளுக்கு ஆபத்து

இப்படியான அடக்குமுறையின் காரணமாக ஊடகர்களின் குரல்கள் மட்டும் நெரிக்கப்படுவதில்லை. நம்பகமான செய்திகளுக்கும், காத்திரமான கருத்துப் பகிர்வுகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் பொதுமக்களின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்தின் இயங்குமுறையிலும் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகிறது.

கைதுசெய்யப்பட்ட நைஜீரியப் பத்திரிகையாளர் லூக்கா பினியாத்
கைதுசெய்யப்பட்ட நைஜீரியப் பத்திரிகையாளர் லூக்கா பினியாத்

ஆதாரங்களின் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படும் சூழலில், பொதுமக்களின் சார்பில் நிற்காமல் அரசின் ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படும் பத்திரிகையாளர்களின் கை ஓங்குகிறது. அது ஊடகங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் குலையச் செய்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, சமூக ஊடகங்களின் யுகத்தில் பொய்ச் செய்திகளின் பரவல், சமூகத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 19-வது கூறு, தொடர்புகொள்வதற்கான உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது. அது சாமானிய மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முற்றிலும் பொருந்தும். உலக அளவில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைப் பொதுச் சமூகத்துக்கு அடையாளப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவ.2-ம் தேதியை, பத்திரிகையாளர்கள் மீதான குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்குக்கு முடிவுகட்டும் வகையில் ஓர் அடையாள தினமாக அனுசரிக்கிறது ஐநா. இதன் மூலம், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்படும் வகையில் சட்டபூர்வ பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளுக்கு ஐநா ஆதரவளிக்கிறது.

இந்தியாவின் நிலை என்ன?

புவி அரசியல் எல்லைகளைத் தாண்டி அந்தந்த நாடுகளின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொள்ள பத்திரிகையாளர்களுக்கென பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. உடல் ரீதியிலான தாக்குதல்கள், அவதூறுகள், தடைகள், கைது நடவடிக்கைகள் என அடக்குமுறைகளுக்குள்ளாகும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த சட்டங்கள் ஏதும் இல்லை. இந்தச் சூழலில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது உலக அளவிலான ஊடகர்களின் கோரிக்கை.

ஊடகச் சுதந்திரத்தின் அடிப்படையில், எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு நார்வே. சரி, இந்தியாவுக்கு இதில் எத்தனையாவது இடம் தெரியுமா? 142-வது இடம். 2020-ம் ஆண்டிலும் அதே இடம்தான். 2019-ல் 140-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இறங்குமுகத்தில்தான் இருக்கிறது.

ஆம், ஊடகச் சுதந்திரத்திலும் இந்தியா செல்ல வேண்டிய தூரம் அதிகம்தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in