கடவுச்சொல் சேமிப்பு தளத்தில் நடந்த ‘களவு’: அதிர்ச்சியில் பயனாளர்கள்

கடவுச்சொல் சேமிப்பு தளத்தில் நடந்த ‘களவு’: அதிர்ச்சியில் பயனாளர்கள்

தமிழில் ‘கடவுச்சொற்கள்’ என அழைக்கப்படும் பாஸ்வேர்டுகளைப் பராமரிக்கும் லாஸ்ட்பாஸ் (LastPass) எனும் தளத்தை ஹேக்கர்கள் ஊடுருவி மூலக் குறியீட்டையும், உரிமத் தகவல்களையும் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லாஸ்ட்பாஸ் தளத்தில் உலகமெங்கும் உள்ள 3.3 கோடி பேர் தங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைத்திருக்கின்றனர். நெட்ஃப்ளிக்ஸ், ஜிமெயில் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் உள்ள தங்கள் கணக்குகளுக்கான கடவுச்சொற்களை லாஸ்ட்பாஸ் தளத்தின் மூலம் அவர்கள் பராமரிக்கிறார்கள்.

அதாவது, லாஸ்பாஸில் கடவுச்சொற்களைச் சேமித்துவைப்பதால், ஒவ்வொரு முறையும் லாகின் செய்யும்போது கடவுச்சொல்லை டைப் செய்ய வேண்டியதில்லை. படாகோனியா, யெல்ப் இன்க், ஸ்டேட் ஃபார்ம் போன்ற முக்கிய நிறுவனங்கள் லாஸ்ட் பாஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

நம்பகமான தளமாகக் கருதப்படும் இந்தத் தளத்தில் நடந்திருக்கும் திருட்டால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் கணக்குக்குள் ஊடுருவியதன் மூலம், இந்தத் திருட்டை ஹேக்கர்கள் நிகழ்த்தியிருக்கலாம் எனத் தெரியவருகிறது.

அதேசமயம், தங்கள் தளத்தில் திருட்டு நிகழ்த்தியிருக்கும் ஹேக்கர்கள், தங்கள் பயனாளர்களின் கடவுச்சொற்களைத் திருடியிருக்க முடியாது என்று இதுகுறித்து எழுதியிருக்கும் பதிவில் லாஸ்ட்பாஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இவ்விஷயத்தில் விரைவில் தீர்வுகாணும் பணியில் இணையப் பாதுகாப்பு முகமைகள் இறங்கியிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in