பணப் பிரச்சினையில் பரிதவிக்கும் பாலஸ்தீன்!

கைவிரித்த அரபு நாடுகள்
பணப் பிரச்சினையில் பரிதவிக்கும் பாலஸ்தீன்!

ஆண்டுக்கணக்காகத் தொடரும் பொருளாதாரத் தேக்க நிலை காரணமாக, பாலஸ்தீனர்களின் பகுதிகளை நிர்வகிக்கும் ‘பாலஸ்தீன தேசிய ஆணையம்’ பொதுத் துறை ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாமல் தவிக்கிறது. விலைவாசி அதிகரித்துவருகிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. பாலஸ்தீனுக்கு நன்கொடை வழங்கி வந்த பல அரபு நாடுகள், உதவிகளை நிறுத்திவிட்டன அல்லது கணிசமாகக் குறைத்துவிட்டன.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தான் தொடர்ந்து அதிகம் வழங்கிவந்தன. அமெரிக்க உதவியை 2017-ல் ட்ரம்ப் நிறுத்தினார். உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும் என்று அறிவித்த புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்தத் தொகையை பாலஸ்தீன தேசிய ஆணையத்துக்கு நேரடியாக வழங்க முடியாமல் அமெரிக்காவின் புதிய சட்டம் தடுக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் உதவியைக் குறைத்துவிட்டன.

பாலஸ்தீன தேசிய ஆணையத்தில் மொத்தம் 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்குச் சேவைகளை அளிக்க சுமார் 1.5 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் இருக்கின்றனர். இதுமட்டுமின்றி பாலஸ்தீன இயக்கத்தில் சேர்ந்ததால் சிறை வைக்கப்பட்டுள்ள பலருடைய குடும்பங்களுக்கும் மாதந்தோறும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இஸ்ரேல் அரசும் பாலஸ்தீனப் பகுதிகளில் வசூலிக்கும் வரி வருவாயில் ஒரு பகுதியை அளிப்பது வழக்கம். சில மாதங்களாக அதைத் தராமல் இழுத்தடிக்கிறது. பாலஸ்தீனப் பகுதிகளில் மேற்கொண்ட சில வளர்ச்சிப் பணிகளுக்காக பிடித்துக்கொள்ளப்போவதாகவும் கூறுகிறது. இக்காரணங்களால் பாலஸ்தீன தேசிய ஆணையம் நிர்வாகத்தைத் தொடர முடியாமல் திணறுகிறது. நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறோம் என்று பிரதமர் முகம்மத் ஸ்தய்யா நிருபர்களிடம் இந்த வாரம் நேரிலேயே தெரிவித்தார். பொதுத் துறை ஊழியர்களுக்கு மாதம்தோறும் இஸ்ரேலிய ஷெகல் நாணயத்தில் 9,200 லட்சம் தேவைப்படுகிறது. பாலஸ்தீன தேசிய ஆணையப் பகுதியில் எகிப்து பவுண்டு, இஸ்ரேலின் ஷெகல், ஜோர்டானின் தினார் ஆகியவை புழக்கத்தில் உள்ளன. மேற்குக் கரைப்பகுதியும் காஜா குன்றுப் பகுதியும் இந்த ஆணையத்தின் சிவில் நிர்வாகத்தில் வருகின்றன.

பாலஸ்தீன தேசிய ஆணைய அரசின் செலவுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பொதுத் துறை ஊழியர்களின் ஊதியமும் சுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு வெவ்வேறு சமூகநல திட்டங்களுக்காகவும் நேரடியாகப் பணம் தரப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆணையம் வாங்கிய கடனுக்கான வட்டியும் அதிகமாகிறது. கடன் கேட்டால் தருவதற்கும் யாரும் முன்வருவதில்லை. பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடமிருந்து 100 கோடி டாலர்கள் கடன் வாங்கித்தர இஸ்ரேல் அரசு சில ஆண்டுகளுக்கு முன்னால் முயற்சி எடுத்தது. ஐக்கிய நாடுகள் சபை அதைத் தடுத்துவிட்டது. பாலஸ்தீன், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத – தேர்வு நிலை - நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் 138 நாடுகள் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. இஸ்ரேலின் யோசனையை ஏற்றால் நாளை இதே போன்ற அந்தஸ்துள்ள பிற நாடுகளும் கடனுதவி கேட்கும் என்று ஐநா தடுத்திருக்கிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் ஆஸ்லோ நகரில் 1993-95-ல் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான், பாலஸ்தீன தேசிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. யாசர் அராபத் இதில் முக்கியப் பங்கு வகித்தார். இதை இடைக்கால அரசாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. பாலஸ்தீனர்களுக்கென்று முழு அளவிலான நாடு ஏற்படும்போது பயன்படுவதற்காக இந்த நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்குள் காவல் துறையும் இருந்தாலும் அது இஸ்ரேலிய ராணுவம், அரசால் கண்காணிக்கப்படுவதாகவும் அவர்களுக்குக் கட்டுப்பட்டதாகவுமே இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்காக பாடுபடும் இயக்கங்கள் ஃபடா, ஹமாஸ் என்று இரண்டாகப் பிரிந்து நிற்கின்றன. பாலஸ்தீன தேசிய ஆணையம் பெரும்பாலும் ஃபடா உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஹமாஸைவிட இது மிதவாதிகளைக் கொண்டது.

பாலஸ்தீனின் நகர்ப்புறப் பகுதி, ஊரகப் பகுதிகள் பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் நிர்வாகத்தில் உள்ளன. இஸ்ரேல், தான் ஆக்கிரமித்த பகுதிகளில் ஏற்படுத்திய புதிய குடியிருப்புகளும், ஜோர்டான் பள்ளத்தாக்கும், இஸ்ரேலிய, பாலஸ்தீனப் பகுதிகளை இணைக்கும் புறவழிச்சாலைகளும் இஸ்ரேலிய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. பாலஸ்தீனர்களுக்கு அவ்வப்போது கட்டுமானத் துறையில் வேலை கொடுத்து வந்த இஸ்ரேல் இப்போது நிறுத்திவிட்டது. இதனால் பாலஸ்தீனர்களிடையே வேலையின்மை அதிகரித்துள்ளது. பாலஸ்தீனர்கள் தங்களுடைய பகுதியில் நிறுவிய விமான நிலையத்தை ஒரு பூசலின்போது இஸ்ரேலிய ராணுவம் தகர்த்துவிட்டது. சிறிய துறைமுகத்தைக் கட்டும் வேலையும் காலதாமதமாகிக் கொண்டே வருகிறது. எனவே, பாலஸ்தீன தேசிய ஆணையத்தால் சுயமாக வருவாய் ஈட்ட முடியவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இருந்திராத வகையில் பாலஸ்தீன ஆணையத்துக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்றும் இதற்கு முக்கியக் காரணம்.

ஐரோப்பிய ஒன்றியம் வரும் மார்ச் மாதம் 6,800 லட்சம் டாலர்களைத் தரும், அது வரை 6 மாதங்களுக்கு நெருக்கடி நீடிக்கும் என்று திட்டமிடல் - உதவி ஒருங்கிணைப்புக்கான அரசு ஆலோசகர் எஸ்திபான் சலாமே தெரிவிக்கிறார். 2021 இறுதியில் பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் பற்றாக்குறை 169 கோடி டாலர்களாகிவிடும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது. கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் அரசு 50 கோடி ஷெகல்களைப் பாலஸ்தீன ஆணையத்துக்குக் கடனாக வழங்கியது. முன்பெல்லாம் பாலஸ்தீனுக்கு நிதி நெருக்கடி என்று கேள்விப்பட்டவுடனேயே, அரபு நாடுகள் ஓடோடி வந்து தேவைக்கும் அதிகமாகக் கொடுத்துவிட்டுச் செல்லும் என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் ரமல்லாவில் உள்ள பொருளாதார வல்லுநர் ஜாஃபர் சதாகா. இந்த ஆண்டு பாலஸ்தீனுக்கு வெளிநாடுகளின் நன்கொடையில் 90 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டதைப் பிரதமர் ஸ்தய்யா, பாலஸ்தீன ஆணையத்தின் சிறப்புக் கூட்டத்திலேயே தெரிவித்தார். நிதி தேவைப்பட்டால் வங்கிகளிடம் ஆணையம் கடன் வாங்கும். இப்போது வங்கிகள் கடன்தர மறுக்கின்றன. வாங்கும் தொகைக்கு ஏற்ப சொத்து எதையாவது அடமானம் தர முடியுமா என்று கேட்கின்றன. இதற்குக் காரணம் 2021 ஆகஸ்ட் மாதம் வரையில் உள்ளூர் வங்கிகளுக்குப் பாலஸ்தீன ஆணையம் திருப்பித் தர வேண்டிய கடன் அளவு 250 கோடி அமெரிக்க டாலர்களாகும்.

காஸா பகுதியில் சுமார் 20 லட்சம் பேர் வாழ்கின்றனர். அங்கு வேலையில்லாதவர் எண்ணிக்கை 45 சதவீதம். வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்வோர் 59 சதவீதம். கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பலியானோர் 1,605. மேற்குக் கரையில் மக்கள்தொகை சுமார் 30 லட்சம். வேலையில்லாதோர் 17 சதவீதம். இங்கு வறுமைக் கோட்டுக்கும் கீழே 30 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இங்கு கோவிட்-19 பெருந்தொற்றில் இறந்தவர்கள் 3,128 பேர்.

ஊதியம் கிடைக்காததால் பாலஸ்தீனப் பொதுத் துறை ஊழியர்கள், தங்களுடைய குடும்பத்தாருக்கு உணவு வாங்கித்தர முடியாமல் திண்டாடுகின்றனர். சாப்பாட்டு அளவைக் குறைத்தும், சர்க்கரை போன்றவற்றை வாங்குவதை நிறுத்தியும் செலவைக் குறைக்கப் பார்க்கின்றனர். விடுதலைக்காகப் போராடிய பாலஸ்தீன் இப்போது உயிர் தரித்திருக்கவே போராடும் நிலை ஏற்பட்டுவிட்டதுதான் பெருந்துயரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in