உக்ரைனுக்குப் போர் விமானங்களை வழங்கி உதவிய பாகிஸ்தான் தொழிலதிபர்!

உக்ரைனுக்குப் போர் விமானங்களை வழங்கி உதவிய பாகிஸ்தான் தொழிலதிபர்!
முகமது ஸஹூர் - கமாலியா ஸஹூர் தம்பதி...

பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது ஸஹூர், பிரிட்டனின் தொழிலதிபர்களில் ஒருவர். உக்ரைனில் ’கீவ் போஸ்ட்’ நாளிதழை நடத்திவந்தவர். உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட பலரைப் பத்திரமாக வெளியேற்ற உதவியவர். உக்ரைன் பாடகியான கமாலியாவின் கணவர். இப்படிப் பல்வேறு விதங்களில் உக்ரைனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் முகமது ஸஹூர், சமீபத்தில் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் அந்நாட்டுக்கு இரண்டு போர் விமானங்கள் வாங்கித் தந்திருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.

உக்ரைனின் ‘டிஎஸ்என்’ ஊடகச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூஸ்வீக் இதழ் இதுதொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதில் அவரது மனைவி கமாலியா ஸஹூர் ‘மார்னிங் வித் உக்ரைன்’ எனும் நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்தத் தகவலை வெளியிடுவதற்கு என் கணவர் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறார். பொதுவாகவே அவரும் அவரது நண்பர்களும் தங்கள் செயல்பாடுகளை வெளியில் தெரிவிப்பதில்லை. அவர்கள் இரண்டு போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

உக்ரைன் போரில் சிக்கித்தவித்த பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் புகுவதற்கு முகமது ஸஹூர் பெரிய அளவில் உதவியதாக ‘கலீஜ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதி திரட்டி, பிரிட்டனுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பலரை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்குத் துணைநிற்க உலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதிலும் ஈடுபட்டிருக்கிறார்.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த ஒருவர், உக்ரைனுக்கு வலிமை சேர்க்க போர் விமானம் வாங்கித் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in