இந்த முறை தப்புமா இம்ரான் கான் ஆட்சி?

இந்த முறை தப்புமா இம்ரான் கான் ஆட்சி?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ராஜதந்திரங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியிருக்கின்றன. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த நாடாளுமன்றத் துணை சபாநாயகர் காஸிம் சுரியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும் எனும் நிலையில் இருக்கிறார் இம்ரான் கான். இறுதிப் பந்துவரை அடித்து ஆடப்போவதாகச் சொன்ன இம்ரான் கானின் ஆட்சி தப்புமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவையில் மார்ச் 8-ல், எதிர்க்கட்சிகள் இம்ரான் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் கடும் பணவீக்கத்துக்கும் அவரது அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என அக்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தச் சூழலில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த ஜமூரி வதன் கட்சியின் ஒரே உறுப்பினரான ஷஹ்ஸைன் புக்தி, கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் கைகோக்க முடிவெடுத்தார். இதையடுத்து, பலூசிஸ்தான் அவாமி கட்சியும் (பிஏபி) இதே முடிவை எடுக்க, இம்ரான் கானின் சரிவு தொடங்கியது. முக்கியக் கூட்டணிக் கட்சியான ‘முத்தாஹிதா கவுமி இயக்கம் - பாகிஸ்தான்’ (எம்கியூஎம்-பி) கட்சியும் ஆளுங்கட்சி எம்.பி-க்களும் எதிர்க்கட்சிக் கூட்டணியை நோக்கி நகர்ந்தன. இன்றைய தேதிக்கு அவரது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.பி-க்களும் எதிர்முகாமுக்குச் சென்றுவிட்டனர்.

ஏப்ரல் 3-ல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தானின் அரசமைப்புச் சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் எதிரானது எனக் கூறி அதைத் தள்ளுபடி செய்தார் துணை சபாநாயகர் காஸிம் சுரி. இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், விரைவில் தேர்தல் நடத்தவும் அதிபர் ஆரிஃப் ஆல்வி உத்தரவிட்டார். இடைக்காலப் பிரதமராக, முன்னாள் தலைமை நீதிபதி குல்ஸார் அகமதுவைப் பரிந்துரைத்தார் இம்ரான் கான்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை எதிர்க்கட்சிகள் அணுகின. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பண்டியால் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு துணை சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. நேற்று விசாரணை நடைபெற்றபோது, நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர்.

இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. துணை சபாநாயகரின் உத்தரவுதான் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 95-வது சட்டக்கூறை மீறும் உத்தரவு என்று தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பாகப் புதிய மனுவைத் தாக்கல் செய்வதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 58-வது சட்டக்கூறின்படி, அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, நாளை (ஏப்.9) காலை 10 மணி அளவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.

ஏப்ரல் 3-ல் வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே 1 லட்சம் ஆதரவாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார் இம்ரான் கான். அதையும் இம்ரான் கான் அரசுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்துசெய்வதற்கு, பாதுகாப்புப் பிரச்சினையையும் ஒரு காரணமாகச் சொல்லியிருந்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 342 இடங்கள் உள்ளன. தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி எம்.பியான கயல் ஸமான் சமீபத்தில் காலமானார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) உறுப்பினர் ஜாம் அப்துல் கரீம் ஒரு கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில், மொத்த இடங்களின் எண்ணிக்கை 340 ஆகியிருக்கிறது. பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவை. தங்களுக்குப் போதுமான ஆதரவாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோர் வரவேற்றிருக்கின்றனர்.

தனது அரசைக் கவிழ்க்க அமெரிக்கா சதிசெய்கிறது என்றும், எதிர்க்கட்சிகள் அதற்குத் துணைபோகின்றன என்றும் இம்ரான் கான் கூறிவருகிறார். தங்களை துரோகிகள் எனக் குற்றம்சாட்டிய இம்ரான் கானை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.

ராணுவத்தின் நகர்வுகள்

இம்ரான் கான் பிரதமராகப் பதவியேற்க பாகிஸ்தான் ராணுவம் பெரிதும் துணைபுரிந்தது. இந்நிலையில், ராணுவத்தின் நகர்வுகள் உற்று கவனிக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, இரு முறை இம்ரான் கானைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ராணுவம் என்ன முடிவெடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக ராணுவம் ஏற்கெனவே கூறிவிட்டது. ஐஎஸ்ஐ தலைவர் நியமனத்தில் ராணுவத்துக்கு எதிரான நிலைப்பாட்டை இம்ரான் கான் எடுத்தது இரு தரப்புக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியது. பாஜ்வா மூன்றாவது முறையாகப் பதவியில் தொடர விரும்பும் நிலையில் இம்ரான் கான அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப்

வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்தால், தற்போது திரட்டியிருக்கும் கட்சிகளின் ஆதரவுடன் அடுத்த பிரதமராகப் பதவியேற்கும் முடிவில் இருக்கிறார் நவாஸ் ஷெரீபின் தம்பியான ஷெபாஸ் ஷெரீஃப். அது நடந்துவிட்டால், நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் ஷெரீஃபும் அரசில் முக்கிய இடத்துக்கு வந்துவிடுவார். அதன் தொடர்ச்சியாக, நவாஸ் ஷெரீஃப் லண்டனிலிருந்து நாடு திரும்பிவிட முடியும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி கருதுகிறது.

2018-ல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். 2023 ஆகஸ்ட் வரை இம்ரான் அரசின் பதவிக்காலம் மிச்சம் இருக்கிறது. இதுவரை பாகிஸ்தான் பிரதமர்கள் யாருமே 5 ஆண்டுகாலப் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்யவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் அரசு தோற்றால், அந்தப் பட்டியலில் அவரும் அடங்குவார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in