‘இன்று இரவு 9 மணிக்கு’ - இம்ரான் கானின் புதிய திட்டம்!

‘இன்று இரவு 9 மணிக்கு’ - இம்ரான் கானின் புதிய திட்டம்!

ஒரு முடிவோடுதான் இருக்கிறார் இம்ரான் கான். இன்று தனது ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான் கான், “தொண்டர்களே, தேர்தலுக்குத் தயாராகுங்கள். இந்த முறை சுயநலம் கொண்டவர்கள் அல்லாமல் விசுவாசமான, தியாகத்தன்மை கொண்ட தொண்டர்களையே நான் முன்னிறுத்துவேன். வெளிநாட்டுச் சதியில் பங்கேற்றவர்களுக்கு இந்தத் தேர்தலில் ஒரு பாடம் புகட்டுவோம்” என்று கூறியிருக்கிறார்.

இம்ரான் கானின் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரும் எதிர்க்கட்சிகளின் முயற்சியும் முறியடிக்கப்பட்டுவிட்டது. மூன்று மாதங்களின் தேர்தலை எதிர்கொள்ளும் நிலைக்கு எதிர்க்கட்சிகளைத் தள்ளியிருக்கும் இம்ரான் கான் தனது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியினரைத் தேர்தலுக்குத் தயார் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

அமெரிக்கா மீது பகிரங்கக் குற்றச்சாட்டு

தனது ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளைத் திரட்டியதாக அமெரிக்கா மீது குற்றம்சுமத்தியிருக்கிறார் இம்ரான். ஆரம்பத்தில் அமெரிக்காவின் பெயரை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிய அவர், தற்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டொனால்டு லு தான் இந்தச் சதிக்குப் பின்னால் இருக்கிறார் எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்களின் ஆட்சி அமைவதற்கு முக்கியப் பங்கு வகித்தது பாகிஸ்தான் உளவுத் துறைதான். இதில் அமெரிக்காவுக்கு ஏற்கெனவே அதிருப்தி இருந்தது. அதன் பின்னர், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் வெளிப்படையான ஆதரவை இம்ரான் அரசு வழங்கியதும், பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் அவர் சென்று வந்ததும் அமெரிக்காவிடம் மேலும் கசப்புணர்வை விதைத்தன. இதையெல்லாம் வைத்துதான், தனது அரசைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி நடப்பதாக இம்ரான் கான் கூறிவருகிறார். இன்று ஆற்றிய உரையில், “பாகிஸ்தான் ஒரு சுதந்திரமான நாடு. யாருக்கும் அடிபணியாது” என்று கூறியிருக்கிறார். இவ்விவகாரத்தில் அமெரிக்கா மீது ரஷ்யாவும் கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது.

இந்தச் சூழலில், ‘பிரதமர் இம்ரான் கானின் உற்சாகமான ஆதரவாளர்கள் அடுத்து ஒன்றுகூட வேண்டிய இடம் ஃபாத்திமா ஜின்னா பூங்கா (ஜி-9 கேட்). நாள்: செவ்வாய்க் கிழமை, ஏப்ரல் 5. நேரம் இரவு 9 மணி. முழுமையாகப் பங்கேற்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்’ என தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ட்வீட் செய்திருக்கிறது.

இதையடுத்து இன்று இரவு இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் கலந்துகொள்ளவிருக்கும் பேரணி மீது கவனம் குவிந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in