‘குஜராத் கசாப்புக்கடைக்காரர், இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்..’

‘குஜராத் கசாப்புக்கடைக்காரர், இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்..’

’குஜராத் கசாப்புக்கடைக்காரான மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரான பிலாவல் புட்டோ, ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எழும் வழக்கமான இந்திய - பாகிஸ்தான் மோதலின் அங்கமாக பாக் அமைச்சர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்துக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அந்த வகையில் பாதுகாப்பு கவுன்சிலின் சீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது விவாதத்துக்கு அவசியமின்றி காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் புட்டோ சர்தாரி பேச ஆரம்பித்தார். அந்த தலைப்பில் விவாதிக்க அவையையும் நெருக்கினார்.

இதனால் பாகிஸ்தான் அமைச்சரை கண்டிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதிலடி தர வேண்டியதாயிற்று. 'அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்த அல்கொய்தா அமைப்பின் ஒசாமா பின்லாடனுக்கும், இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கு(பாகிஸ்தான்) காஷ்மீர் பற்றி பேச தகுதியில்லை' என ஜெய்சங்கர் தாக்கினார்.

இதற்கு பதிலளித்த பிலாவல் புட்டோ, “ஒசாமா பின்லாடன் இறந்துவிட்டார். ஆனால் குஜராத்தில் ஒரு கசாப்புக்கடைக்காரர் இன்னும் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராகவும் இருக்கிறார். பிரதமராகும் வரை அவருக்கு இங்கே(அமெரிக்கா) நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அவரும் அவருடைய வெளியுறவுத் துறை அமைச்சரும் ஹிட்லரின் நாஜிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழி வந்தவர்கள்” என்று இந்திய பிரதமர் மோடி மட்டுமன்றி, வெளியுறவுத்துறை அமைச்சரையும் தாக்கினார்.

சர்வதேச அரங்கில் இந்திய பிரதமர் மோடி குறித்து ஆட்சேபத்துக்கு உரிய வகையில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரிக்கு எதிராக இந்தியாவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசிர் புட்டோவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கத்து.

2019, ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தினை மத்திய அரசு ரத்து செய்தது. அது முதலே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன. வான்பரப்பை விமானங்கள் கடப்பது, விளையாட்டு வீரர்கள் எல்லைதாண்டி பரஸ்பரம் பங்கேற்பது உள்ளிட்டவை தடைக்கு ஆளாகியுள்ளன. தற்போதைய இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களின் நேரடி மோதலும் உஷ்ணத்தை அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in