
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து தொடர்வதாக பாகிஸ்தான் நீதிமன்றம் கவலை தெரிவித்திருக்கிறது.
'பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்' கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் அண்மையில் படுகொலை தாக்குதலுக்கு ஆளானார். காலில் குண்டு பாய்ந்த நிலையில் உயிர் தப்பியிருக்கும் இம்ரான், ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மீண்டும் தொடங்கி இருக்கிறார். இந்த போராட்டங்களால் பாதிக்கப்படுவதாக கூறி வர்த்தகர்கள் சிலர் சார்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது.
மனுதாரரின் கோரிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் வர்த்தகர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து தொடர்வதாகவும், அவருக்கு தற்போதைய அரசு முழு பாதுகாப்பு நல்க வேண்டும் என்றும் அக்கறை தெரிவித்தது. சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், இம்ரான் கான் உயிருக்கான ஆபத்தை சித்தரித்த நீதிமன்றம், முன்னாள் பிரதமரின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் அரசை வலியுறுத்தியது.
படுகொலை தாக்குதலில் உயிர் பிழைத்ததும், தடைபட்டுப் போன பேரணியை மீண்டும் தொடரச் செய்திருக்கிறார் இம்ரான் கான். இந்த பேரணிக்கு நாடு முழுக்க ஆதரவு எழுந்து வருகிறது. அவற்றின் அடையாளமாக இஸ்லமாபாத் நீதிமன்றம் இம்ரான் கான் மீது கரிசனம் தெரிவித்திருப்பது இம்ரான் ஆதரவாளர்களுக்கு உற்சாகம் தந்திருக்கிறது.
ஆளும் ஷெபாஸ் ஷரிப் தலைமையிலான அரசுக்கு எதிராகவும், பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்த வலியுறுத்தியும், இம்ரான் கான் கட்சியினர் மாபெரும் போராட்டங்களை அறிவித்து இருந்தனர். இதன் தொடக்கமாக நவ.4 அன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருக்கும் வாசிராபாத்தியில் இம்ரான் கான் துப்பாக்கி தாக்குதலுக்கு ஆளானார். தற்போது மருத்துவமனையில் இருந்தபடி மக்கள் போராட்டத்தை வழி நடத்தும் இம்ரான் கானுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. அவற்றில் ஒன்றாக நீதிமன்றமும் சேர்ந்திருப்பதாக இம்ரான் பிடிஐ கட்சியினர் பெருமிதம் கொண்டிருக்கின்றனர்.