பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகள் தாமாக வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றோடு முடிவதால், நாளை முதல் அவர்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்கும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 17 லட்சம் ஆப்கன் அகதிகளை, ஆப்கானிஸ்தானுக்கு கட்டாயமாக அனுப்பும் பணிகளை பாகிஸ்தான் அரசு நாளை தொடங்க இருக்கிறது. ரஷ்யாவில் தொடங்கி அமெரிக்கா வரை, ஆப்கானிஸ்தான் தேசம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஆதிக்க நாடுகளால் அலைக்கழிக்கப்பட்டு வந்தது. உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி அண்டை தேசமான பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்தனர்.
ஆப்கனில் தாலிபன்களின் கை ஓங்கத் தொடங்கியபோது, பாகிஸ்தானிலும் அதன் தாக்கத்தினாலான பயங்கரவாத குழுக்கள் அதிகரித்தன. அந்த குழுக்களால் பாகிஸ்தான் எல்லையிலும், உள்ளாகவும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்தன. இந்த பயங்கரவாத குழுக்களில், ஆப்கனில் இருந்து அகதிகளாக வந்தவர்களே அதிகம் இடம்பெற்றிருப்பதாக பாகிஸ்தான் கண்டறிந்தது. எனவே, ’பாகிஸ்தான் தாலிபன்’ பயங்கரவாத குழுக்களை அடக்க, ஆப்கன் அகதிகளை ஆப்கானிஸ்தானுக்கே அனுப்ப முடிவு செய்தது.
அதன்படி, ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானிலிருந்து தாமாக வெளியேற அக்.31 காலக்கெடுவை முன்னதாக பாகிஸ்தான் அறிவித்தது. பாகிஸ்தான் உத்தரவுக்கு இணங்கி கணிசமானோர் ஆப்கனுக்கு திரும்பினார்கள். ஆனால் சுமார் 2 லட்சம் அகதிகள் மட்டுமே ஆப்கனுக்கு திரும்பியிருப்பதாகவும், சுமார் 17 லட்சம் பேர் உரிய ஆவணங்கள் இன்றி பாகிஸ்தானில் தங்கியிருப்பதாகவும் பாகிஸ்தான் கண்டறிந்தது.
இதனை அடுத்து அவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணிகள் நாளை தொடங்கும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தானில் செயல்படும் தாலிபன் ஆதரவு பயங்கரவாத குழுக்களை சீண்டியுள்ளதால், பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனையொட்டி ஆப்கன் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!