மதநம்பிக்கையால் தடுப்பூசி போடாத மக்கள்; வேகமாக பரவும் தட்டம்மை - ஜிம்பாப்வேயில் 157 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

மதநம்பிக்கையால் தடுப்பூசி போடாத மக்கள்; வேகமாக பரவும் தட்டம்மை - ஜிம்பாப்வேயில் 157 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

ஜிம்பாப்வேயில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால் 157 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தட்டம்மை நோயினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை ஒரு வாரத்திற்குள் இரட்டிப்பாகும் என்று ஜிம்பாப்வே அரசாங்கம் எச்சரித்துள்ளது.

நான்கு நாட்களில் நாடு முழுவதும் சந்தேகத்திற்கிடமான தட்டம்மை நோய் பாதிப்பின் எண்ணிக்கை 1,036 இலிருந்து 2,056 ஆக உயர்ந்துள்ளது. இறந்த குழந்தைகள் அனைவரும் தட்டம்மை தடுப்பூசி போடவில்லை என்று ஜிம்பாப்வே நாட்டின் தகவல் அமைச்சர் மோனிகா முட்ஸ்வாங்வா தெரிவித்தார்.

ஜிம்பாப்வேயில் முதல் தட்டம்மை தொற்று இந்த மாத தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. தடுப்பூசி போடுவதில் நம்பிக்கை இல்லாத மதப் பிரிவுகளைச் சேர்ந்த ஆறு மாதங்கள் முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இந்த நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் முட்ஸ்வாங்வா, “ உயிரிழந்த பெரும்பாலான குழந்தைகள் தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவசரநிலையை சமாளிக்க அரசாங்கம் சிவில் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே அரசாங்கம் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஆதரவைப் பெற பாரம்பரிய மற்றும் மதத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. அரசாங்கம் தரப்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். அவசரநிலையைச் சமாளிக்க தேசிய பேரிடர் நிதியிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கும் சிறப்புச் சட்டத்தை அமல்படுத்தவுள்ளோம்” என தெரிவித்தார்.

தட்டம்மை வைரஸ் பார்வை இழப்பு , மூளை வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட சில தீவிர சிக்கல்களை குழந்தைகளுக்கு உருவாக்குகிறது. மேலும், இந்த நோய் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த குழந்தைகளின் மரணத்திற்கும் காரணமாகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்படுவதால், தடுக்கக்கூடிய நோய்கள்கூட ஆப்பிரிக்காவை அதிகம் பாதிக்கிறது. இதனால் தட்டம்மை பாதிப்பு ஆப்ரிக்காவில் 400 சதவீதம் அதிகரித்து வருவதாக கடந்த ஏப்ரல் மாதம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in