
ஜெர்மனி தலைநகர் பெர்லினின் மேற்குப் பகுதியில், மக்கள் கூட்டம் மீது கார் மோதிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேருக்குப் படுமோசமாகக் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் பெர்லின் தீயணைப்புத் துறை, இந்தச் சம்பவத்தில் ஏராளமானோர் லேசான காயமடைந்தனர் என்றும் கூறியிருக்கிறது.
கார் படுவேகமாகக் கூட்டத்தில் பாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மக்கள் கூட்டம் மீது மோதிய பின்னர் ஒரு கடையின் வாசலில் அந்த கார் மோதி நின்றதாகவும், அங்கிருந்தவர்கள் அந்த காரின் ஓட்டுநரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில், ‘2016 கிறிஸ்துமஸ் தாக்குதல்’ நடந்த இடத்துக்கு அருகே நடந்திருக்கும் இந்தச் சம்பவம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது விபத்தா, திட்டமிடப்பட்ட தாக்குதலா என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை. ‘2016 கிறிஸ்துமஸ் தாக்குதல்’ சம்பவம் நடந்த பிரெட்ஷீட்ப்ளஸ் பகுதிக்கு அருகே இந்தத் தாக்குதல் நடந்திருப்பதால், இது பயங்கரவாதத் தாக்குதலா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.
2016 டிசம்பர் 19-ல் கிறிஸ்துமஸ் சந்தையின்போது அனீஸ் அம்ரி எனும் நபர் லாரியை ஓட்டிச் சென்று கூட்டத்தின் மீது மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. துனிசியாவைச் சேர்ந்த அகதியான அனீஸ் அம்ரி, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் எனத் தெரியவந்தது. 4 நாட்களுக்குப் பின்னர் இத்தாலியின் மிலன் நகர் அருகே போலீஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.