‘உண்மையான மோ ஃபரா நான் அல்ல!’ - ஒலிம்பிக் சாம்பியன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

‘உண்மையான மோ ஃபரா நான் அல்ல!’  - ஒலிம்பிக் சாம்பியன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பிரிட்டனைச் சேர்ந்த மோ ஃபரா எனும் முகமது முக்தார் ஜமா ஃபரா, உலகப் புகழ்பெற்ற தடகள சாம்பியன். ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றவர். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 5,000 மீட்டர் - 10,000 மீட்டர் இரட்டையர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர். இளம் வயதில், சோமாலியாவிலிருந்து தனது பெற்றோருடன் அகதியாக பிரிட்டனுக்கு வந்ததாக முன்பு கூறியிருந்த மோ ஃபரா, தான் யார் என்பது குறித்து தற்போது வெளியிட்டிருக்கும் தகவல் பலரையும் அதிரவைத்திருக்கிறது.

‘பிபிசி டிவி’ சேனலில் நாளை ஒளிபரப்பாகவிருக்கும் ‘தி ரியல் மோ ஃபரா’ எனும் ஆவணப்படத்தில், தனது உண்மையான அடையாளத்தை வெளியிட்டிருக்கிறார் மோ ஃபரா. “நீங்கள் நினைக்கும் ‘நான்’ அல்ல நான். பெரும்பாலானோருக்கு மோ ஃபரா என்றுதான் என்னைத் தெரியும். ஆனால், அது என் பெயர் அல்ல. அந்தத் தகவல் உண்மையும் அல்ல” என்று அந்த ஆவணப்படத்தில் மோ ஃபரா தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் பகிரங்கப்படுத்தியிருக்கும் பல தகவல்கள் அவரது கடந்த காலக் கண்ணீர்க் கதையை மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க நாடுகளின் அவல நிலையையும், அகதிகளின் பரிதாப வாழ்க்கையையும் பதிவுசெய்திருக்கின்றன.

உறையவைக்கும் உண்மை

தற்போது 39 வயதாகும் மோ ஃபரா, 9 வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஜிபூட்டி எனும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து பிரிட்டன் அழைத்து வரப்பட்டு, குழந்தைத் தொழிலாளராக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டவர். அவரது உண்மையான பெயர் ஹுசைன் அப்தி கஹீன்.

மோ ஃபரா எனும் பெயர் கொண்ட வேறொரு சிறுவனின் ஆவணங்களை ஹுசைன் அப்தியின் புகைப்படத்துடன் சேர்த்து போலி ஆவணம் உருவாக்கப்பட்டது. சிறுவனை பிரிட்டனுக்கு விமானம் மூலம் அழைத்துவந்த பெண், அவனது உறவினர்களின் வீட்டில் அவனைச் சேர்ப்பதாக உறுதியளித்திருந்தார். அப்பெண்ணை அச்சிறுவன் அதற்கு முன் சந்தித்ததே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

பிரிட்டன் வந்து சேர்ந்ததும் உறவினர் வீட்டின் விலாசம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய தாளை அவனிடமிருந்து வாங்கி, அவன் கண் முன்பாகவே கிழித்து குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார் அந்தப் பெண். அந்தக் கணத்தில்தான் மிகப் பெரிய பிரச்சினையில் தான் மாட்டியிருப்பதைப் பரிதாபத்துக்குரிய அந்தச் சிறுவன் உணர்ந்தான்.

அங்குள்ள ஒரு குடும்பத்தின் வீட்டு வேலைகளைப் பார்க்கவும், குழந்தைகளைப் பராமரிக்கவும் அந்தச் சிறுவன் கட்டாயப்படுத்தப்பட்டான். ‘உனக்கு உணவு வேண்டுமெனில்... உன் குடும்பத்தை மீண்டும் பார்க்க வேண்டுமெனில் இதை யாரிடமும் சொல்லக் கூடாது’ என மிரட்டப்பட்டான்.

தனக்கு நேர்ந்த துயரத்தைத் தாள முடியாத அந்தச் சிறுவனால், கழிப்பறையில் அமர்ந்து கண்ணீர் வடித்ததைத் தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை.

எப்படியோ பள்ளிக் கல்வி பயிலும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியது. அவனது விளையாட்டுப் பயிற்சி ஆசிரியராக இருந்த ஆலன் வாட்கின்ஸன் அவன் மீது பரிவு கொண்டார். விளையாட்டு மைதானத்துக்கு வந்தவுடன் அவனிடம் உத்வேகம் தொற்றிக்கொள்வதை அவர் உணர்ந்தார். அவனைப் பற்றி விசாரித்தார். அவனுக்குக் குடியுரிமை கிடைக்க உதவி செய்தார்.

இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கும் மோ ஃபரா, “அந்தச் சூழலிலிருந்து விடுபட வேண்டுமென்றால் வெளியே வந்து ஓடியே ஆக வேண்டும் என முடிவெடுத்தேன்” என்று கூறியிருக்கிறார். ஓட்டப்பந்தயத்தில் இருந்த அபாரத் திறமை அந்தச் சிறுவனின் உலகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியது. பின்னாட்களில் ஒலிம்பிக் சாம்பியனாகவும் ஆக்கியது.

2000-ம் ஆண்டு பிரிட்டன் குடியுரிமையைப் பெற்று, உலக சாம்பியனாகிவிட்டாலும் முகமது ஃபராவின் மனம் பரிதவித்துக்கொண்டுதான் இருந்தது. உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் துடித்துக்கொண்டிருந்தது.

உண்மையை வெளிப்படுத்த என்ன காரணம்?

2010-ல் முகமது ஃபராவுக்குத் திருமணம் நடந்தது. அவரது மனைவி தானியாவுக்குத் தனது கணவரின் கடந்தகால வாழ்க்கை குறித்த தகவல்களில் நிறைய விடுபடல்கள் இருப்பதாகத் தோன்றியது. தோண்டித் தோண்டி விசாரிக்க ஆரம்பித்தார். தனது மனைவியிடம் உண்மையை மறைக்க அந்த மனிதர் விரும்பவில்லை. அத்தனையையும் சொல்லிவிட்டார். எனினும், வெளியுலகத்துக்கு அந்த உண்மையை உடனடியாக வெளிப்படுத்த முகமது ஃபரா விரும்பவில்லை.

எனினும், மோ ஃபராவின் குழந்தைகள் உண்மையை வெளிப்படுத்துமாறு அவரை வற்புறுத்தினர். இதையடுத்து மறைக்கப்பட்ட தனது கடந்த கால வரலாற்றை இந்த ஆவணப் படத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். முகமது ஃபரா எனும் பெயரில் இருந்த உண்மையான சிறுவன் தற்போது நலமாக இருப்பார் என்றே நம்புவதாகவும் குற்றவுணர்வுடன் தெரிவித்திருக்கிறார்.

அதிரவைக்கும் இந்த உண்மையை வெளிப்படுத்திய மோ ஃபராவுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ‘மனதை உருக்கும் தனது வாழ்க்கைக் கதையை வெளிப்படுத்திய மோ ஃபராவின் துணிச்சலைப் பாராட்டுகிறோம். இதுபோன்ற துயரங்களை எதிர்கொள்பவர்களின் நிலையை அவரது கதை வெளிப்படுத்தியிருக்கிறது. அடைக்கலம் தேடும் மக்களுக்குப் பாதுகாப்பான வழிமுறைகளை உருவாக்கும் அவசியத்தையும் உணர்த்தியிருக்கிறது’ என பிரிட்டன் அகதிகள் கவுன்சில் அறக்கட்டளை ட்வீட் செய்திருக்கிறது.

உண்மையான பெற்றோர் என்ன ஆனார்கள்?

மோ ஃபராவின் உண்மையான பெற்றோர் பிரிட்டனுக்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர் 4 வயது குழந்தையாக இருந்தபோதே, சோமாலியாவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் அவரது தந்தை கொல்லப்பட்டுவிட்டார். அவரது தாயும் இரண்டு சகோதரர்களும் ‘சோமாலிலாண்ட்’ என அழைக்கப்படும் ஒரு பகுதியில் வசித்துவருகின்றனர். அந்தப் பிராந்தியம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாதது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in