‘கணவரை மீண்டும் காண முடியாதோ என பயந்தேன்’ - ஸெலன்ஸ்கியின் மனைவி பகிர்ந்துகொண்ட பகீர் தகவல்கள்

ஓலெனா ஸெலன்ஸ்கா
ஓலெனா ஸெலன்ஸ்கா

உக்ரைன் போரில், அதிபர் ஸெலன்ஸ்கியின் குடும்பம் ரஷ்யாவால் நேரடியாகக் குறிவைக்கப்பட்டது. போரின் முதல் நாளிலேயே தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிறைப்பிடிக்க ரஷ்யப் படைகள் முயன்றதாக ஏப்ரல் மாதம் ‘டைம்’ இதழுக்கு அளித்த பேட்டியில் ஸெலன்ஸ்கி கூறியிருந்தார். வெடிகுண்டுகள் வெடிக்கும் ஓசை பலத்த சத்தத்துடன் கேட்டதாகவும் ரஷ்யப் படையினர் விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் குதித்து அதிபர் மாளிகையை நோக்கி முன்னேறி வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அன்றைய இரவு, அதிபர் மாளிகை மற்றும் அலுவலகங்களின் அனைத்து விளக்குகளும் அணைத்துவைக்கப்பட்டிருந்தன என்றும், அதிபர் மாளிகையில் ஸெலன்ஸ்கியின் மனைவியும் குழந்தைகளும் இருந்த நேரத்திலேயே இரண்டு முறை ரஷ்யப் படையினர் உள்ளே நுழைய முயன்றனர் என்றும் உக்ரைன் ராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒலெக்ஸி ஆரெஸ்டோவிச் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘தி கார்டியன்’ நாளிதழின் செய்தியாளர் ஷான் வாக்கருக்கு அளித்திருக்கும் பேட்டியில் போர்க் காட்சிகளை எதிர்கொண்ட விதம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் ஸெலன்ஸ்கியின் மனைவி ஓலெனா ஸெலன்ஸ்கா. இன்று வெளியாகியிருக்கும் அந்தப் பேட்டியில் அவர் பதிவுசெய்திருக்கும் தகவல்களின் தொகுப்பு இது:

போர் தொடங்கிய பிப்ரவரி 24-ம் தேதி அதிகாலை, வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட ஸெலன்ஸ்கா, அதிபர் மாளிகையின் அடுத்த அறைக்கு விரைந்தார். அந்த நேரத்திலேயே கோட், டை அணிந்து ஸெலன்ஸ்கி தயாராக இருந்தார். அவரிடம், “என்ன நடக்கிறது?” என்று விசாரித்தார். பின்னர் தன் கணவர் அங்கிருந்து சென்றதும் தன் குழந்தைகளைத் தேடிச் சென்றார். 17 வயது மகளான ஓலெக்ஸாண்ட்ரா, 9 வயது மகனான கிரிலோ என இருவரும் கிளம்பி தயாராக இருந்தனர். தங்கள் உடைமைகளை ஒரு சூட்கேஸில் திணித்துவைத்த ஸெலன்ஸ்கா, பின்னர் அதிபர் மாளிகையின் முதல் மாடியில் உள்ள அறையின் ஜன்னலுக்கு அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு போர் விமானம் பெரும் ஓசையெழுப்பியபடி மிகத் தாழ்வாகப் பறந்துசென்றதைப் பார்த்தார். அது உக்ரைன் விமானமா அல்லது ரஷ்ய விமானமா என உறுதியாகத் தெரியவில்லை என அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஸெலன்ஸ்கி
ஸெலன்ஸ்கி

அது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது என்றும், கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதுபோல தோன்றியது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் அக்குடும்பம் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது.

மாலையில்தான் கணவர் ஸெலன்ஸ்கியை ஸெலன்ஸ்காவால் சந்திக்க முடிந்தது. ஸெலன்ஸ்காவையும் குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புவதாக அவரிடம் ஸெலன்ஸ்கி தெரிவித்தார். இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர். ஆனால், கண்ணீர் சிந்தவோ, உணர்ச்சிவசப்பட்டு அழவோ நேரம் இருக்கவில்லை. அப்போது தனது கணவரை மீண்டும் பார்க்க முடியாதோ எனப் பயந்ததாக ஸெலன்ஸ்கா கூறியிருக்கிறார்.

போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் மூன்று திசைகளிலிருந்தும் உக்ரைன் தலைநகர் கீவை, ரஷ்யப் படைகள் சூழ்ந்திருந்தன. அப்போது வெளியிட்ட காணொலி ஒன்றில், “கிடைத்திருக்கும் உளவுத் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, எதிரிகள் என்னை முதல் குறியாகத் தீர்மானித்திருப்பதாகவும், என் குடும்பத்தை இரண்டாவதாகக் குறிவைத்திருப்பதாகவும் தெரியவருகிறது” என ஸெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

ஆனால், அது எந்த மாதிரியான அச்சுறுத்தல் எனக் குறிப்பாக எதையும் தனது மனைவிக்கு அவர் தெரிவிக்கவில்லை. அதுபற்றி இந்தப் பேட்டியில் நினைவுகூர்ந்திருக்கும் ஸெலன்ஸ்கா, “அதைப் பற்றி அதிகமாக நினைத்துப் பார்க்கவில்லை. ஒருவேளை அதைப் பற்றிச் சிந்தித்தால் பிரம்மை பிடித்தவளாகிவிடுவேன்” என்று கூறியிருக்கிறார். அதேசமயம், தங்கள் குடும்பத்தைச் சிறைப்பிடித்திருந்தால் அது ரஷ்யாவுக்குப் பெரிய ஆதாயமாக அமைந்திருக்கும் என்பதை உண்ர்ந்திருப்பதாகவும் அந்தப் பேட்டியில் பதிவுசெய்திருக்கிறார்.

தலைநகர் கீவிலிருந்து வெளியேறி, மேற்கு உக்ரைன் அல்லது போலந்திலிருந்து நாடு கடந்த அரசு அமைத்துக்கொள்ளுமாறு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியபோதும், ஸெலன்ஸ்கி அதற்குச் சம்மதிக்கவில்லை. எனினும், தனது மனைவியையும் குழந்தைகளையும் தொலைதூரத்தில் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவைத்தார். தலைநகர் கீவில் தாக்குதல்கள் குறைந்திருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் அதிபர் மாளிகைக்குத் திரும்பிவிட்டனர். அவர்கள் எங்கு தங்கியிருந்தனர், எப்போது திரும்பிவந்தனர் என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. பாதாள அறையிலோ, நீர்நிலைக்கு அடியிலோ ரகசிய இடம் அமைத்து தங்கவில்லை என்று தெரிவித்திருக்கும் ஸெலன்ஸ்லா, தங்களிடம் தொலைக்காட்சி இருந்ததாகவும் அதில் அன்றாடப் போர் செய்திகளைத் தானும் தனது குழந்தைகளும் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜில் பைடனுடன் ஸெலன்ஸ்கா
ஜில் பைடனுடன் ஸெலன்ஸ்கா

கடந்த சில வாரங்களாக, பிற நாடுகளின் அதிபர்களின் மனைவிகளுடன் பேசிவருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் சமீபத்தில் உக்ரைனுக்கு வருகை தந்திருந்தபோது அவருடன் இணைந்து மேற்கு உக்ரைன் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்குச் சென்றுவந்தார் ஸெலன்ஸ்கா.

ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கும் என போருக்கு முதல் நாள் இரவில்கூட நினைக்கவில்லை என்றும் ஸெலன்ஸ்கா அந்தப் பேட்டியில் பதிவுசெய்திருக்கிறார். தனது பாஸ்போர்ட் கூட தயாராக இல்லை என்றும் மெலிதான நகைச்சுவையுடன் அவர் கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in