எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

இந்த ஆண்டு அமெரிக்காவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யப்போகும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் அளவு அதிகரிக்கப்போகிறது. எந்த அளவுக்கு என்றால் 11 சதவீதம் எனும் அளவுக்கு. இதில் என்ன வியப்பு என்று தோன்றலாம். ஒரே சமயத்தில் ரஷ்யா, ஈரான், அமெரிக்கா மூன்றுமே இந்தியாவுக்கு எண்ணெய் விற்க ஆர்வம் தெரிவித்து ஒப்பந்தங்களையும் செய்ய முன்வந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை இந்தியா விரும்பாவிட்டாலும் ஐக்கிய நாடுகள் அவையில் ரஷ்யாவுக்கு எதிராக பிற நாடுகள் கொண்டுவந்த தீர்மானங்களை ஆதரிக்கவில்லை. அதே சமயம் இரு நாடுகளுடனும் நட்புறவில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இரு நாட்டுத் தலைவர்களிடமும் பேசிய பிரதமர் மோடி, சண்டை வேண்டாம் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று பல முறை சொல்லிப் பார்த்தார். உக்ரைனில் தங்கி மருத்துவம் படித்த 15,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்டுவர உக்ரைன், ரஷ்யா இரு நாட்டுத் தலைவர்களுடனும் தூதரகங்களுடனும் இடைவிடாமல் பேசிய இந்தியா அதில் வெற்றி கண்டது. இந்த நிலையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா, அந்த நாட்டுடன் எந்த நாடும் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று எச்சரித்தது.

ரஷ்யாவிடமிருந்துதான் இந்திய ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்களையும் சாதனங்களையும் இந்தியா கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவுக்கு ஒரு காலத்தில் இறக்குமதி செய்து வந்தது. சமீபத்திய ஆண்டுகளாக அதைக் குறைத்துக் கொண்டு 60% சதவீதத்துக்கு கட்டுப்படுத்தியது. போர் காரணமாகவும் பெருந்தொற்றுக்காலத்துக்குப் பிறகு கச்சா பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை அதிகரிக்காமல் விலையை மட்டும் உயர்த்தியதாலும் இந்தியா கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த தடை நடவடிக்கைகளால் அந்த நாடும் பெட்ரோலிய எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்யவும் விற்கவும் முடியாமல் தவிக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணெயை விற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்தியாவுக்குச் சிறப்பு சலுகை

ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை எரிவாயு இரண்டையும் ஐரோப்பிய நாடுகள்தான் அதிகம் வாங்குகின்றன. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்ற அமெரிக்கத் தடை அந்த நாடுகளை மிகவும் பாதித்துவிடும் என்பதால் அதை மட்டும் அனுமதிப்பதாக ஜாடை காட்டிவிட்டது அமெரிக்கா. தொடர்ந்து தனக்கு உற்ற நண்பனாக இருக்கும் இந்தியாவுக்கு உதவவும், தன் நாட்டு எண்ணெய், இயற்கை எரிவாயுவைச் சந்தைப்படுத்தவும் தீர்மானித்த ரஷ்யா இந்தியாவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் தரத் தயார் என்றும் வெகு தொலைவிலிருந்து எடுத்துச் செல்ல போக்குவரத்துச் செலவு அதிகமாகும் என்பதால் தள்ளுபடியை அதிகம் தருவதாகவும் எண்ணெய்க்கு டாலரில் பணம் தராமல் இந்திய ரூபாயிலோ, ரூபிளிலோ தந்தால் போதும் என்றும் சலுகை வழங்கியிருக்கிறது. இந்த விற்பனையை அமெரிக்கா தடுக்க முடியாது என்பது ரஷ்யாவுக்கும் தெரியும். ரஷ்யாவிடமிருந்து நேரடியாக எண்ணெய் வாங்காமல் சர்வதேச முகமை மூலம் வாங்கிக்கொள்கிறது இந்தியா. இதனாலும் பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க முகாந்திரம் இல்லை.

தன் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று கோரி வரும் ஈரான், தன்னுடைய நீண்ட கால வாடிக்கையாளரான இந்தியாவுக்கு எண்ணெய் மேலும் அதிகமாக விற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறது. அதுவும் டாலரில்தான் பணம் தர வேண்டும் என்பது அவசியமில்லை என்று கூறியிருக்கிறது. போரினால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருகிறது. எனவே டாலரோ, ரூபாயோ இந்தியாவுக்கு எது வசதியோ அதில் தந்தால் போதும் அப்படியில்லாவிட்டால் அந்த மதிப்புக்கு ஈரானுக்குத் தேவைப்படும் சரக்குகளை அளித்தால்கூட போதும் என்று கூறியிருக்கிறது.

அமெரிக்காவின் புரிதல்

ரஷ்யாவிடமிருந்து யாரும் எதையும் வாங்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி வரும் அமெரிக்காவும், இந்தியாவின் நிலைமையை நன்கு புரிந்துகொண்டிருக்கிறது. வளரும் நாடான இந்தியா தன்னுடைய தேவைகளுக்காக 80 சதவீத கச்சா பெட்ரோலிய எண்ணெயை இறக்குமதி மூலம்தான் பெறுகிறது என்பதாலும் அதன் விலை உயர்வால் பொருளாதாரம் மிகவும் பாதிப்பு அடையும் என்பதாலும் இந்தியாவுக்குள்ள இடர்களைப் புரிந்துகொண்டு, தன்னுடைய எண்ணெய் வயல்களில் கிடைக்கும் எண்ணையை இன்னும் அதிக அளவில் விற்கத் தயார் என்று இப்போது அமெரிக்காவும் முன்வந்திருக்கிறது.

இந்தியாவுக்குத் தேவைப்படும் கச்சா பெட்ரோலிய எண்ணெயில் 23 சதவீதத்தை இராக் அளிக்கிறது. சவுதி அரேபியா 18 சதவீதம், ஐக்கிய அரபு அமீரகம் 11 சதவீதம் தருகின்றன. இந்த ஆண்டு அமெரிக்கா நமது தேவையில் 8 சதவீதத்தை அளிக்கும். இதை மேலும் அதிகரிக்கவும் தயாராக இருக்கிறது. இவை போக அரசுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்களும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 20 லட்சம் பீப்பாய்களும் மே மாதம் முதல் ரஷ்யாவிடமிருந்து வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. வெனிசுலா, கனடா போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு எண்ணெய் விற்க முன்வரக் கூடும்.

ஒரு சில நாடுகளையே நம்பியிருப்பதால் அந்த நாடுகளிடம் விலையில் பேரம் பேசவும் முடியாமல் இந்தியா இதுவரை தவித்து வந்தது. தங்களுடைய மிகப் பெரிய வாடிக்கையாளர் இந்தியாதான் என்றாலும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் இந்தியாவுக்கு விலையில் அதிக சலுகை தராமல் எண்ணெய் விற்றன. நாங்கள் கொடுக்காவிட்டால் எண்ணெய் வாங்க முடியாமல் தவிப்பீர்கள், எனவே நாங்கள் சொல்லும் விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள் என்பதே அவற்றின் தோரணையாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்திய அரசு பேரம் பேசத் தொடங்கியது. இவ்வளவு அதிகம் வாங்கும் பெரிய வாடிக்கையாளர் என்பதால் நீங்கள்தான் தள்ளுபடி தந்து, தொடர்ந்து எங்களிடமே வாங்குங்கள் என்று ஊக்குவிக்க வேண்டும். மாறாக அதிகம் வாங்குகிறவருக்கு அதிக விலை என்று நிபந்தனை விதிக்கிறீர்களே என்று கேட்டது. அத்துடன் ஒரு சில நாடுகளிடம் மட்டும் வாங்காமல் பல நாடுகளிடமிருந்தும் வாங்க முற்பட்டது. எப்படியோ எதிரெதிர் முகாம்களில் உள்ள நாடுகள்கூட (அமெரிக்கா, ரஷ்யா) நெருக்கடியான இந்தத் தருணத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் விற்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எண்ணெய் வயல்கள் குறைவு. இருக்கும் ஒரு சில இடங்களிலும் எண்ணெய் வயல்களைத் தோண்ட விடாமல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த நிலையை மாற்றத்தான் கச்சா பெட்ரோலிய எண்ணெயில் மீதேன் கலப்பதை அதிகப்படுத்தவும் சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகப்படுத்தவும் இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. புவி வெப்பமடைவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் உதவும் என்பதால் அரசு இதில் ஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கத்தான் மின்சார பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in