‘இசையால் வசமாகா இதயம் எது?’ இன்று சர்வதேச இசை தினம்!

இசையில் லயிப்பு
இசையில் லயிப்பு

இசையில் வசமாகா இதயம் இந்த உலகில் இல்லை. நம்மில் பலருக்கும் இசை இல்லாத அன்றாடம் என்பது கற்பனை செய்தும் பார்க்க முடியாதது. எல்லோருடைய வாழ்விலும் பல்வேறு தருணங்களிலும் ஏதேனும் ஒரு இசைத் துணுக்கு அல்லது பாடல் முணுமுணுப்பாய் உள்ளுக்குள் ஒலிக்கவே செய்யும். அவை நம் வாழ்வின் ஒளியாய், உயிர்வளியாய் வழி நடத்தவும் செய்யும்.

இசையை ரசிக்கவும், கொண்டாடவும் இசையை பெரிதாய் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு பகுதி மக்களின் இசை என்பது அவர்களின் வாழ்வு, வரலாறு, கலாச்சாரம், போராட்டம் மற்றும் உணர்வு உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கக் கூடியது. அதனால்தான் உலகின் வெவ்வேறு மூலைகளிலும் ஒலிக்கும் இசையின் வடிவங்கள் வெவ்வேறாக தொனிக்கின்றன. அப்படியான இசையை பகிர்ந்து உணரவும், சிலாகிக்கவும் உருவானதே சர்வதேச இசை தினம்.

சர்வதேச இசை தினம்
சர்வதேச இசை தினம்

ஐநாவின் யுனெஸ்கோ சார்பில் இன்னொரு இணை அமைப்பாகவே 1949ல் சர்வதேச இசைக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் பிரிந்து கிடக்கும் மனிதர்களை இசையின் வாயிலாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை சர்வதேச இசை கவுன்சில் எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக சர்வதேச இசை தினத்தை 1973ல் உருவாக்கி, அதனை 1975 முதல், ஆண்டுதோறும் அக்.1 அன்று அதிகாரபூர்வமாக அனுசரித்து வருகிறது.

சர்வதேச இசை தினத்தின் நோக்கங்கள் மிகவும் எளிமையானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இசையின் வாயிலாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிப்பது; இசையின் கூறுகளையும், திறன்களையும் சகலரும் கற்றுக்கொள்ள உதவுவது; சலிப்பான நம் வாழ்வின் காலியான கோப்பைகளை தங்களது இசையால் நிரப்பி வரும் இசைக் கலைஞர்களை அங்கீகரிப்பது போன்றவை சர்வதேச இசை தினத்தின் நோக்கங்களில் அடங்கும்.

இசை
இசை

சர்வதேச இசை தினத்தை கொண்டாட பெரிதாக மெனக்கிடத் தேவையில்லை. அன்றைய தினம் மனதுக்குப் பிடித்த பாடல்கள் அல்லது இசைக் கோர்வைகளை கேட்டு ரசிக்கலாம். அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து உய்யலாம். இசை ரசிகர்களின் பரப்பை இன்னும் விரியச் செய்யலாம்.

இப்படி இசையை ரசிப்பது, உடல், மனம், ஆன்மா என அனைத்தையும் செப்பனிடக் கூடியது. இசையை ரசிப்பதும், இசைக்கருவிகளை வாசிப்பதும் உடலுக்கும், மனதுக்கும் உத்வேகம் தரக்கூடியது. இசை தன்னை ரசிப்பவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் குறைத்து, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இசை
இசை

இசையை ரசிப்பது உடலில் கார்டிசோல் அளவை குறைத்து, செரோடோனின் மற்றும் எண்டோர்பின் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கச் செய்வது அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. உடல் மற்றும் மனத்தின் வலி தீரவும் இசை வழி செய்யும். நோயாளிகள் மற்றும் வயதில் மூத்தவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் இன்னும் பல பாசிடிவ் பலாபலன்களை இசை நிரூபித்திருக்கிறது.

இசைவான வாழ்க்கைக்கு இசையை இன்னும் சற்று கூடுதலாக ரசிப்போம். இசையின் கர்த்தாக்களுக்கு மரியாதை சேர்ப்போம். சர்வதேச இசை தினத்தில் அவற்றுக்கு உறுதி ஏற்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in