அணுகுண்டு வீசி தென் கொரியாவை அழித்துவிடுவோம்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை மிரட்டல்
அணுகுண்டு வீசி தென் கொரியாவை அழித்துவிடுவோம்!

வட கொரியாவுக்கும் அமெரிக்காவின் நட்பு நாடான தென் கொரியாவுக்கும் இடையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பகை நீடிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் அவ்வப்போது கடுமையான முரண்கள் தோன்றும். வட கொரியாவின் தரப்பிலிருந்து கடும் மிரட்டல்களும் விடுக்கப்படும். அந்த வகையில், தென் கொரியாவை அழிக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

வட கொரியா மீண்டும் ஆயுத சோதனைகளில் இறங்கியிருப்பது குறித்து கருத்து தென் கொரியாவின் பாதுகாப்புத் துறைத் தலைவர் சுஹ் வூக் கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக இந்த எச்சரிக்கையை கிம் யோ ஜாங் விடுத்திருக்கிறார். இந்த வாரத்தில் அவர் விடுத்திருக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது.

2017-ம் ஆண்டுக்குப் பின்னர் கண்டம்விட்டு கண்டம் தாவும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை, கடந்த மாதம் முழு அளவில் சோதித்துப் பார்த்திருக்கிறது வட கொரியா. இந்த வகை ஏவுகணைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளில் தாக்குதல் நடத்தக்கூடியவை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடைகளைத் தாண்டி இதுபோன்ற சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.1) இதைப் பற்றிப் பேசியிருந்த சுஹ் வூக், “எங்கள் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா திட்டமிடுவதாகத் தெரிந்தால், அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த நாங்கள் தயார். வட கொரியாவின் எந்த இலக்கின் மீதும் துல்லியமாகவும் உடனடியாகவும் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகள் எங்களிடம் இருக்கின்றன” என்றும் எச்சரித்திருந்தார்.

இதனால் கோபமடைந்த கிம் யோ ஜாங் தென் கொரியாவுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார். “அணு ஆயுதப் படைகளைத் தற்காப்புக்காகத்தான் வைத்திருக்கிறோம். ஆனால், மோதல் ஏற்பட்டால், எதிரிகளின் ஆயுதப் படைகளை ஒரே அடியில் அழிக்க அவை பயன்படுத்தப்படும்” என்று கூறியிருக்கும் கிம் யோ ஜாங், வட கொரிய ராணுவத்துடன் எந்த விதத்திலும் தென் கொரிய ராணுவம் இணையாகாது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பொறுப்பற்ற முறையில் இப்படிப் பேசுவதைத் தென் கொரியா கைவிட வேண்டும் என்றும், பேரழிவைத் தவிர்க்க விரும்பினால் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இருந்த காலகட்டத்தில், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, அணு ஆயுத சோதனைகளையும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளின் சோதனைகளையும் வட கொரியா நிறுத்திவைத்திருந்தது. எனினும், 2019-ல் இரு தரப்புப் பேச்சுவார்த்தை முறிவடைந்தது. இதையடுத்து அமெரிக்கா - வட கொரியா பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

வட கொரியாவின் நிறுவனத் தலைவர் கிம் இல் சுங்கின் 110-வது பிறந்ததினம் இந்த ஆண்டு கொண்டாடப்படவிருக்கிறது. இதுபோன்ற கொண்டாட்டங்களின்போது பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்தி, தனது ராணுவ பலத்தை உலகுக்குப் பறைசாற்றுவதை வட கொரியா வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கிம் யோ ஜாங்?

தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான, வட கொரிய அதிபரின் செய்தித் தொடர்பாளராகச் செயலாற்றிவருகிறார் யோ ஜாங். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தனது அண்ணனின் பிம்பத்தைக் கட்டமைப்பதிலும், அவரது திட்டங்களுக்கு மூளையாகச் செயல்படுவதிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். தென் கொரியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தவர் அவர்.

அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு அமைந்த நிலையில், “தென் கொரியாவுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அமெரிக்காவின் புதிய அரசு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்றால், முதல் வேலையாக கொரிய தீபகற்பத்தில் துப்பாக்கி ரவைகளின் துர்நாற்றம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி நிற்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார் கிம் யோ ஜாங்.

பாசமலர்கள்

கிம் ஜாங் உன்னும், கிம் யோ ஜாங்கும் ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள பள்ளியில் படித்தவர்கள். இருவரும் வட கொரிய அரசின் கண்காணிப்பின் கீழ், அங்குள்ள ஒரு வீட்டில் தங்கிப் படித்துவந்தனர். தன் தங்கையின் மீது நம்பிக்கையும் பாசமும் கிம் ஜாங் உன்னுக்கு அதிகரித்தது அந்தச் சமயத்தில்தான். 2008-ல், இருவரின் தந்தையும் அப்போதைய அதிபருமான கிம் ஜாங் இல்லின் உடல்நிலை மோசமானதையடுத்து, அடுத்த அதிபராக அண்ணனைக் கொண்டுவருவதில் பின்னணியிலிருந்து இயங்கியவர் யோ ஜாங். 2011-ல் ஆட்சிக்கட்டிலில் கிம் ஜாங் உன் அமர்ந்ததன் பின்னணியில் முக்கிய முகமாக அவர் இருந்தார்.

கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு வட கொரியாவின் அதிபராகும் வாய்ப்பும் யோ ஜாங்குக்குத்தான் இருக்கிறது என்கிறார்கள். 2017-ல் அதிபரின் ‘கொரிய தொழிலாளர் கட்சி’யின் பொலீட் பீரோ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோ ஜாங், கட்சிக்குள் புதிய அதிகார சக்தியாக வளர்ந்துவருகிறார். அந்நாட்டின் வெளியுறவுத் துறையிலும் முக்கியப் பங்கு வகித்துவருகிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் சந்திப்பின்போது, கிம் ஜாங் உன்னுடன் உடன் இருந்தது அவர்தான்.

Related Stories

No stories found.