
தென் கொரியா மற்றும் ஐநா சபையின் எச்சரிக்கையும் மீறி வருகிற 22ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதிக்குள் உளவு செயற்கைக்கோள் விண்ணுக்கு செலுத்தப்படும் என வடகொரியா அதிரடியாக அறிவித்துள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அண்டை நாடுகளான ஜப்பான் உள்ளிட்டவை தென்கொரியாவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டில் மட்டும் 3 முறை உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு செலுத்த வடகொரியா முயற்சி செய்தது.
2 முறை தோல்வியை தழுவிய நிலையில், தற்போது 3வது முறையாக செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக சமீபத்தில் வடகொரியா அறிவித்திருந்தது.
இதற்கு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததோடு, ஐநா சபையும் கண்டனம் தெரிவித்திருந்தது. உளவு செயற்கைக்கோளை செலுத்தினால் வடகொரியா மீது போர் தொடுப்போம் என்று தென்கொரியா அறிவித்திருந்தது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வருகிற 22ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதிக்குள் உளவு செயற்கைக்கோள் விண்ணிற்கு ஏவப்படும் என வடகொரியா சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தென்கொரிய அதிகாரிகளுக்கு, வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் உடனான போர் காரணமாக வடகொரியா, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்கு பிரதியுபகாரமாக தங்களிடம் உள்ள விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களை வடகொரியாவுக்கு ரஷ்யா வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே தற்போது வடகொரியா, இந்த உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஏற்கெனவே விண்ணுக்கு செயற்கைக்கோள்களை செலுத்திய அனுபவம் வாய்ந்த வடகொரியா தற்போது உளவு செயற்கைக்கோளை ஏவுவதாக கூறியுள்ளதால், பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ
பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!
ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி