‘போர்க்குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்படுமா? - அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்!

‘போர்க்குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்படுமா? -  அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படைகள், அங்கு நிகழ்த்திய போர்க் குற்றங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தப் போர்க்குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்படுமா எனும் எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது. இந்நிலையில், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உக்ரைன் மனித உரிமை அமைப்பின் தலைவர்.

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஆலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும், ரஷ்யாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான 'மெமோரியல்’, உக்ரைனின் மனித உரிமை அமைப்பான ‘சென்டர் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ்’ ஆகியவற்றுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 2007-ல் உக்ரைனில் தொடங்கப்பட்ட சென்டர் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ் அமைப்பு, அந்நாட்டின் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் போர்க் குற்றங்களைத் தொகுத்து ஆவணப்படுத்திவருகிறது. இந்த அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான அலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக், உக்ரைன் போரில் ரஷ்யா நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பாக, ‘தி கார்டியன்’ நாளிதழிடம் பல முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

உக்ரைனின் க்ரைமியா பகுதி மீது 2014-ல் ரஷ்யா தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது. அந்தக் காலகட்டம் தொடங்கி, தற்போது நடந்துவரும் போர் வரை உக்ரைன் மண்ணில் ரஷ்யா நிகழ்த்திவரும் போர்க் குற்றங்கள் தொடபான 21,000-க்கும் மேற்பட்ட சான்றுகளைச் சேகரித்திருக்கிறது சென்டர் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ் அமைப்பு.

அலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக்
அலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக்

அதில் குடியிருப்புப் பகுதிகள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குண்டுகளை வீசி ரஷ்யா நடத்திய தாக்குதல்கள் குறித்த தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இரு தரப்பு உடன்படிக்கையின் மூலம் மக்கள் வெளியேறுவதற்காக உருவாக்கப்பட்ட தடங்கள் மீதும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின. இன்றைய ரஷ்யா இனஅழிப்பு குணத்துடன் நடந்துகொள்வதாகவும் மாட்விச்சுக் தெரிவித்திருக்கிறார். ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து உதவி கோரி ஏராளமான அழைப்புகள் வந்ததை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

அதேசமயம், மிக அதிகமான போர்க் குற்றங்களை நிகழ்த்தியிருக்கும் ரஷ்யா, அத்தனைக் குற்றங்களுக்காகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்குட்படுத்தப்படுமா என்பது சந்தேகம்தான் என அவர் கூறியிருக்கிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குற்றங்கள் குறித்தே விசாரிக்கப்படும் என்பது அவரது வாதம்.

ரஷ்ய அதிபர் புதினும், ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகஷெங்கோவும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பாளிகளாக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கும் மாட்விச்சுக், அதற்கான பணிகளை இப்போதே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருப்பதன் மூலம் உலக அரங்கில் கவனம் ஈர்த்திருப்பதால், அதைப் பயன்படுத்தி ரஷ்யாவின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்கு சர்வதேச அளவில் அழைப்பு விடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in