'இந்தியாவே நிரந்தர வசிப்பிடம் - சீனாவுக்குப் போகமாட்டேன்' - தலாய்லாமா உறுதி

'இந்தியாவே நிரந்தர வசிப்பிடம் - சீனாவுக்குப் போகமாட்டேன்' - தலாய்லாமா உறுதி

சீனாவுக்குத் திரும்புவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், இந்தியாவிலேயே வசிக்க விரும்புவதாகவும் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய தலாய்லாமா, "சீனாவுக்குத் திரும்புவதில் அர்த்தமில்லை. நான் இந்தியாவை விரும்புகிறேன். இதுதான் சிறந்த இடம்.

காங்க்ராவில் நான் வசிக்கவேண்டும் என்பது பண்டிட் ஜவஹர்லால் நேருவின் விருப்பம், இந்த இடமே எனது நிரந்தர வசிப்பிடம்" என்று அவர் புன்னகையுடன் கூறினார்.

86 வயதான தலாய் லாமா, திபெத்திய பௌத்தர்களின் ஆன்மீகத் தலைவர் ஆவார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 6, 1935-ல் தொண்டுப் என்ற பெயரில் திபெத்தில் பிறந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தலாய் லாமாவின் 14 வது அவதாரமாக அடையாளம் காணப்பட்டார். அவர் திபெத்தின் தலைநகரான லாசா புனித நகரத்தில் வசித்து வந்தார்.

அக்டோபர் 1950-ல், ஆயிரக்கணக்கான சீன வீரர்கள் திபெத்தை ஆக்கிரமித்து, அதை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்தனர். அடுத்த சில ஆண்டுகளில், திபெத்தின் மீது சீனா தனது பிடியை இறுக்கியது. அதன் ஆட்சிக்கு திபெத்தில் எதிர்ப்பு பரவத் தொடங்கியது.

நிலைமை மேலும் மேலும் மோசமாக மாறியதால், தலாய் லாமா, 1959-ல் தனது பிறந்த மண்ணை விட்டு அண்டை நாடான இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

பிரதமர் ஜவஹர்லால் நேரு அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்தார், அன்றிலிருந்து அவர் ஹிமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள மெக்லியோட்கஞ்சில் வசித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in