உணவு, தண்ணீர் இல்லை: இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

ருமேனியா எல்லையில் தவிக்கும் தமிழக மாணவர்கள் கண்ணீர்
உணவு, தண்ணீர் இல்லை: இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

ருமேனியா எல்லையில் கடும் குளிர் நிலவும் நிலையில் உணவு, குடிநீர் இன்றி தவிக்கிறோம் என்று தமிழக மாணவர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இதே நேரத்தில் இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரை 5வது நாளாக தீவிரப்படுத்தி வருகிறது ரஷ்ய படைகள். குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தில் நாடியுள்ளது உக்ரைன் அரசு.

இதனிடையே, தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் உயிர் பயத்தில் உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்களை போலாந்து எல்லையில் உக்ரைன் ராணுவம் மற்றும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் தாக்குதல் நடக்கும் பகுதியில் இருந்து ருமேனியா, ஹங்கேரி எல்லைகளுக்கு இந்திய மாணவர்களை வரவழைத்து மத்திய அரசு மீட்டு வருகிறது. போக்குவரத்து வசதி இல்லை என்ற போதும் ஆயிரக்கணக்காண மாணவர்கள் நடந்தே எல்லைக்கு வந்தடையும் சூழல் உள்ளது.

இந்நிலையில், ருமேனியா எல்லைக்கு வந்த தமிழக மாணவ, மாணவிகள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். "வெளிநாட்டு மாணவர்களை உக்ரைன் ராணுவம் தடுத்து வருகிறது. மீட்பு விமானங்கள் வரவில்லை. அழைத்துச் செல்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. எல்லையில் கடும் குளிர் நிலவும் நிலையில் உணவு, குடிநீர் உள்ளிட்டவையின்றி தவிக்கிறோம். போலந்து எல்லை வரை சென்ற எங்களை திருப்பி அனுப்புகின்றனர்" என்று தமிழக மாணவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களை தாயகத்திற்கு அழைத்துவர போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in