இம்ரான் எதிர்கொள்ளும் இமாலயச் சவால்!

இம்ரான் கான்
இம்ரான் கான்

இது இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்நாட்டுக் குழப்பங்கள் உச்சமடையும் தருணம் போலும். கடும் பொருளாதாரச் சிக்கலின் நீட்சியாக நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இலங்கை தவித்துவரும் நிலையில், பக்கத்து நாடான பாகிஸ்தானிலோ மிகப் பெரிய அரசியல் புயல் மையம் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் இம்ரான் கானின் அரசு நீடிக்குமா, வீழுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக வெடித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவையில் மார்ச் 8-ல், எதிர்க்கட்சிகள் இம்ரான் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும், கடும் பணவீக்கத்துக்கும் அவரது அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என அக்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தச் சூழலில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த ஜமூரி வதன் கட்சியின் ஒரே உறுப்பினரான ஷஹ்ஸைன் புக்தி, கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் கைகோக்க முடிவெடுத்தார்.

இதையடுத்து, பலூசிஸ்தான் அவாமி கட்சியும் (பிஏபி) இதே முடிவை எடுக்க, இம்ரானின் சரிவு தொடங்கியது. முக்கியக் கூட்டணிக் கட்சியான ‘முத்தாஹிதா கவுமி இயக்கம் - பாகிஸ்தான்’ (எம்கியூஎம்-பி) கட்சியும் ஆளுங்கட்சி எம்பி-க்களும் எதிர்க்கட்சிக் கூட்டணியை நோக்கி நகரத் தொடங்கியதும் இம்ரான் ஆடிப்போனார். இன்றைய தேதிக்கு அவரது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட எம்பி-க்களும் எதிர்முகாமுக்குச் சென்றுவிட்டனர். பல்வேறு விவகாரங்கள் காரணமாக அவரது கட்சிக்குள் ஏற்பட்ட முரண்களும் அக்கட்சியைப் பலவீனப்படுத்திவிட்டன.

இணைந்து நிற்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்... (இடமிருந்து வலமாக) ஷெபாஸ் ஷெரீஃப், ஆசிஃப் அலி சர்தாரி, ஃபஸல் அர் ரஹ்மான்
இணைந்து நிற்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்... (இடமிருந்து வலமாக) ஷெபாஸ் ஷெரீஃப், ஆசிஃப் அலி சர்தாரி, ஃபஸல் அர் ரஹ்மான்

இம்ரானின் எதிர்வினை

இந்தக் களேபரங்களுக்கு நடுவில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு இம்ரான் அழைப்பு விடுத்தார். அதில் அமைச்சர்களும், சில ஊடகர்களும் பங்கேற்றனர். அப்போது ஒரு முக்கியமான கடிதத்தை அமைச்சரவை சகாக்களுக்கு அவர் காட்டினார் (அந்தக் கடிதம் ஊடகங்களிடம் காட்டப்படவில்லை). மார்ச் 8 அல்லது அதற்கு முந்தைய நாள் அமெரிக்காவிடமிருந்து அரசுக்கு வந்த கடிதம் அது என்று கூறிய இம்ரான், சுதாரித்துக்கொண்டவராக, “இல்லை அமெரிக்கா அல்ல. வேறு ஒரு நாடு” என்றார். அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அந்த ‘வெளிநாட்டு’ ஆதரவு தெரிவிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்திருக்கும் எதிர்க்கட்சிகளுடன் எம்கியூஎம்-பி கட்சி கைகோத்துவிட்ட நிலையில், நிச்சயம் ஆட்சி பறிபோய்விடும் என்பதை நன்கு உணர்ந்துகொண்ட பின்னரே இந்தக் கடிதம் குறித்து அவசர அவசரமாக அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் இம்ரான். கூடவே, மார்ச் 31-ல் நாட்டுமக்களுக்கு நேரலையில் உரையாற்றிய அவர், “பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பின்னர் பிறந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். என் பெற்றோரைப் போல ஆங்கிலேயர்களின் அடிமைத்தளையில் நான் சிக்குண்டு இருக்கவில்லை. நான் சுதந்திரமாக வளர்ந்தேன்” என்றெல்லாம் பேசினார். தனக்குத் தலையாட்டும் பர்வேஸ் முஷரஃப், நவாஸ் ஷெரீஃப் போன்றவர்களையே அமெரிக்கா விரும்புகிறது என்று சாடினார்.

வாக்கெடுப்பில் தோல்வி நிச்சயம் என்பது அவருக்கு நன்கு தெரிந்துவிட்டதால்தான் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளுடன், வரலாற்றுத் தரவுகளையும் சேர்த்து அவர் நீண்ட உரையாற்றினார். சதிக்கோட்பாடு (conspiracy theory) என்றால் பாகிஸ்தானியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். கூடவே, உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் உருக்கமாகப் பேசினால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப்போட்டுவிடுவார்கள். ஆக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலில் தனக்கு வாக்குச் சேகரித்திருக்கிறார் இம்ரான். சுதந்திரமான பாகிஸ்தான், நாட்டைக் கட்டமைத்த முன்னோடிகளின் பெருமை, வெளிநாட்டு சதி என்றெல்லாம் அவர் பேசியதன் அர்த்தம் அதுதான்.

இம்ரானைக் கொல்ல சதி நடப்பதாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரியும் குற்றம்சாட்டினார். தேசத்தை விற்க மறுக்கும் பிரதமர் இம்ரானைப் படுகொலைசெய்ய சதி நடப்பதாகச் சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தெஹ்ரீக்- இ- இன்சாஃப் தலைவர் ஃபைசல் வாவ்தாவும் கூறியிருந்தார்.

பதவியை ராஜினாமா செய்வது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வது அல்லது தேர்தலைச் சந்திப்பது என தனக்கு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டன என்று ‘ஏ.ஆர்.ஒய் நியூஸ்’ செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கூறினார். அதில், தேர்தலைச் சந்திப்பதுதான் சிறந்த முடிவு என முடிவெடுத்ததாகக் கூறிய அவர், இறுதிவரை போராடிப் பார்ப்பது என தீர்மானித்து விட்டதாகவும் தனது கட்சியைச் சேர்ந்த பலரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்துவிட்ட நிலையில், அவர்களை வைத்துக்கொண்டு ஆட்சி செய்ய முடியாது என்றும் கூறினார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இந்தப் பேட்டியிலும் அவர் குறிப்பிட்டார். ஆட்சியை இழந்தாலும் தனக்கு மக்களின் ஆதரவு தொடரும் என்பதால் தான் குறிவைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் இறையாண்மையை பலிகேட்கும் வெளிநாட்டு சக்திகளிடம் மண்டியிடப்போவதில்லை என்று பேசிவருவதாலும் தான் குறிவைக்கப்பட்டிருப்பதாகக் குமுறினார்.

என்ன பிரச்சினை?

இந்த விவகாரத்தில் உள்நாட்டு, வெளிநாட்டுச் சிக்கல்கள் ஏராளம். பலூசிஸ்தானில் நிலவும் பிரச்சினைகளும் இந்த விவகாரத்தின் முக்கிய முடிச்சு. இவ்விஷயத்தில் பலூசிஸ்தான் அவாமி கட்சிக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் (பிஎம்எல்என்-பி) கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீஃப் உறுதியளித்திருக்கிறார். பிஎம்எல்என்-பி கட்சியின் நிறுவனத் தலைவரும், தற்போது லண்டனில் வசிக்கும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் இதன் பின்னணியில் இருப்பதாக இம்ரான் குற்றம்சாட்டியிருக்கிறார்.

குறிப்பாக, நவாஸ் ஷெரீஃபும் அவரது மகள் மரியம் நவாஸும் ராணுவத்துக்கு எதிராகவே பேசிவருபவர்கள் என்று இம்ரான் தெரிவித்திருக்கிறார். எனினும், இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக ராணுவம் கூறிவிட்டது. அதுமட்டுமல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவுக்கும் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்துக்கும் இடையில் நல்ல புரிதல் இருப்பதாகவே கருதப்படுகிறது. கூடவே, பாஜ்வா மூன்றாவது முறையாகப் பதவியில் தொடர விரும்புகிறார். ஆனால், இம்ரான் அதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. ஏற்கெனவே, ஐஎஸ்ஐ தலைவர் நியமனத்தில் ராணுவத்துக்கு எதிரான நிலைப்பாட்டை இம்ரான் எடுத்தது இரு தரப்புக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியது. இப்படி நிறைய சிக்கல்கள்.

இன்னொருபுறம், ராணுவத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட இம்ரான் முயற்சிப்பதும் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஒருவேளை அதிசயம் நடந்து இம்ரான் அரசு நீடித்தாலும், ராணுவத்தின் துணையின்றி அவரால் எதுவும் செய்ய முடியாது. 2018-ல் இம்ரான் அரசு அமைவதற்கு முக்கியக் காரணியாக இருந்ததே பாகிஸ்தான் ராணுவம்தான் என்பது கவனிக்கத்தக்கது.

வெளிநாட்டு விரோதம்

இந்தப் பிரச்சினையில் இம்ரானின் வெளியுறவுக் கொள்கை ஒரு முக்கியக் காரணம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்களின் ஆட்சி அமைவதற்கு முக்கியப் பங்கு வகித்தது பாகிஸ்தான் உளவுத் துறைதான். இதில் அமெரிக்காவுக்கு ஏற்கெனவே அதிருப்தி இருந்தது. அதன் பின்னர், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் வெளிப்படையான ஆதரவை இம்ரான் அரசு வழங்கியதும், பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் அவர் சென்று வந்ததும் அமெரிக்காவிடம் மேலும் கசப்புணர்வை விதைத்தன.

இன்றைய சூழலில், அமெரிக்காவுடன் இணக்கமாகச் செல்லவே பாகிஸ்தான் ராணுவம் விரும்புகிறது. ஆனால், இம்ரான் கானோ ரஷ்யா, சீனாவின் பக்கம் நிற்கிறார். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனும் பெயரில், பாகிஸ்தான் மண்ணில் டிரோன் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களையும் இம்ரான் சாடிவருகிறார். தனது அரசைக் கவிழ்க்க கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே சதி நடப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தவறுதலாக அமெரிக்காவின் பெயரைச் சொன்னதாக இம்ரான் சமாளித்தாலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அதை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் ‘டான்’ (Dawn ) நாளிதழ், இம்ரானின் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையிடமே விளக்கம் கேட்டுவிட்டது. அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கமளித்துவிட்டது. எனினும், நெருக்கடி அதிகரித்த நிலையில், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதருக்கு இம்ரான் அரசு சம்மன் அனுப்பிய சம்பவமும் நடந்தேறியிருக்கிறது.

இனி என்ன ஆகும்?

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 342 இடங்கள் உள்ளன். தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி எம்பி-யான கயல் ஸமான் சமீபத்தில் காலமானார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) உறுப்பினர் ஜாம் அப்துல் கரீம் ஒரு கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில், மொத்த எம்பி-க்களின் எண்ணிக்கை 340 ஆகியிருக்கிறது. பெரும்பான்மைக்கு 172 எம்பி-க்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், எம்கியூஎம்-பி கட்சி எதிர்முகாமுக்குச் சென்றுவிட்டதால் ஆளும் தரப்பின் பலம் 164 ஆகக் குறைந்தது. தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி எம்பி-க்கள் பலர் எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துவிட்டதால், இம்ரான் அரசு பிழைப்பது மிகக் கடினம்!

2023 ஆகஸ்ட் வரை இம்ரான் அரசின் பதவிக்காலம் மிச்சம் இருக்கிறது. ஒருவேளை அவரது அரசு வீழ்ந்துவிட்டால்கூட, அதுவரை நாடாளுமன்றம் தொடர்ந்து இயங்க முடியும். அதன் பின்னர் 60 நாட்களில் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். ஒருவேளை இம்ரான் அரசு தப்பிப் பிழைத்துவிட்டால், நிச்சயம் விரைவில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்வார்.

நவாஸ் ஷெரீஃப்
நவாஸ் ஷெரீஃப்

இம்ரான் அரசு தோல்வியடைந்தால், தற்போது திரட்டியிருக்கும் கட்சிகளின் ஆதரவுடன் அடுத்த பிரதமராகப் பதவியேற்கும் முடிவில் இருக்கிறார் ஷெபாஸ் ஷெரீஃப். அது நடந்துவிட்டால், நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் ஷெரீஃபும் அரசில் முக்கிய இடத்துக்கு வந்துவிடுவார். அதன் தொடர்ச்சியாக, நவாஸ் ஷெரீஃப் லண்டனிலிருந்து நாடு திரும்பிவிட முடியும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி கருதுகிறது. ஷெபாஸ் தான் அடுத்த பிரதமர் என்பதில் எதிர்க்கட்சிகளும் ஏறத்தாழ முடிவே செய்துவிட்டன.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 3) நடக்கும் வாக்கெடுப்பில் தனக்கு எதிராக வாக்களிப்பவர்கள், சர்வதேச சதிக்குத் துணைபோகின்றவர்கள் என சாபமே கொடுத்துவிட்டார் இம்ரான். கூடவே வாக்கெடுப்பு நடக்கும்போது, நாடாளுமன்றத்துக்கு வெளியே 1 லட்சம் ஆதரவாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என்று செபாஸ் ஷெரீஃப் கூறியிருக்கிறார். இந்தக் கட்டுரை வெளியாகியிருக்கும் தருணத்தில் பாகிஸ்தானில் ஒரு பிரளயம் வெடித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in