‘ஆபத்தில் இருக்கும் ஆப்கானியர்களைக் கைவிடாதீர்கள்!’ - மன்றாடும் தொண்டு நிறுவனங்கள்

ஆப்கனைத் தாலிபான்கள் கைப்பற்றிய ஓராண்டில் அதிகரித்திருக்கும் அவலங்கள்
‘ஆபத்தில் இருக்கும் ஆப்கானியர்களைக் கைவிடாதீர்கள்!’ - மன்றாடும் தொண்டு நிறுவனங்கள்

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றி இன்றுடன் ஓராண்டாகிறது. பழமைவாதச் சிந்தனை கொண்ட தாலிபான்களின் ஆட்சியில் ஆப்கானியர்கள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தாலிபான்கள் மீதான கோபத்தில் சர்வதேச சமூகம் இதுவரை அளித்துவந்த நிதியுதவிகள் நிறுத்தப்பட்டதாலும், வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கன் அரசுக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டதாலும் அந்நாட்டு மக்கள் வறுமையின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆப்கன் மத்திய வங்கியும் ஏறத்தாழ செயலிழந்திருக்கிறது. இந்தச் சூழலில், ஆப்கனை சர்வதேச சமூகம் கைவிடக் கூடாது என்று 32 தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

தாலிபான்களின் ஆட்சி அமைந்த பின்னர், ஏராளமான ஆப்கானியர்கள் அண்டை நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். ஆப்கனைவிட்டு வெளியேற முடியாதவர்கள் கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் வாடுகின்றன. ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியில் பல திட்டங்கள் ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்திட்டங்கள் நிறுத்தப்பட்டதால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வறுமை நிலையில் அவதிப்படுகின்றனர். வேலைவாய்ப்பின்மை, பட்டினி என ஒட்டுமொத்த நாடும் வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. உரிய மருந்துகள் மருத்துவ சாதனங்கள் இல்லாமல்,மருத்துவத் துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. பெண்களின் நிலைமை படுமோசம். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை தாலிபான்கள் அமைக்காதவரை, பொருளாதாரத் தடைகளை நீக்குவதில்லை என மேற்கத்திய நாடுகள் உறுதியாகச் சொல்லிவிட்டன.

இந்நிலையில், ஆப்கனில் உள்ள தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் என மொத்தம் 32 அமைப்புகள் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. அதில், வெளிநாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் ஆப்கன் சொத்துகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், மத்திய வங்கி முன்பைப் போல செயல்படுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

ஆப்கன் அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டுச் சொத்துகள் அதிகம் இருப்பது அமெரிக்காவில்தான். அவற்றின் மீதான முடக்கம் தளர்த்திக்கொள்ளப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆப்கானிஸ்தானின் கரன்ஸியான ‘ஆப்கானி’ நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் ஓராண்டுக்கு முன்பே போலந்து நாட்டு நிறுவனமான போலிஷ் செக்யூரிட்டி பிரின்டிங் வொர்க்ஸ் (PSPW) எனும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. ஆனால், அவை அச்சடிக்கப்பட்ட நிலையில் அங்கேயே முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

தாலிபான்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு காரணமாக, அப்பாவி ஆப்கானியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தியிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in