
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் தனது கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.
தொழிலாளர் கட்சித் தலைவரான ஜெசிந்தா ஆர்டெர்ன் நியூசிலாந்து பிரதமராக உள்ளார். அடுத்த மாதம் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் பிப்ரவரி 7-ம் தேதிக்கு முன்பு தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் அக்.14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 42 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எனது பணிக்காலத்தில் அந்தப் பதவியின் வாயிலாக என்ன செய்யலாம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதை செய்ய முடியவில்லை. அதனால் இன்னும் அப்பதவியில் தொடர்வது பதவிக்கு பொருந்தாதது என்று கருதுகிறேன்" என்றார்.
உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம்பெண் என்ற அந்தஸ்தை ஜெசிந்தா ஆர்டெர்ன் பெற்றவராவார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் பிரதமராக பதவியேற்கும் போது அவரது வயது 37. அவரது பதவிக்காலத்தில் கரோனா பெருந்தொற்று சவாலை திறம்பட எதிர்கொண்டார். பொருளாதார மந்த நிலை, க்ரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு, ஒயிட் தீவு எரிமலை வெடிப்பு என பல சவால்களை அவர் சந்திக்க நேர்ந்தது.
இவற்றைப் பற்றி ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், "தேசத்தை அமைதியான சூழலில் வழிநடத்துவதற்கும் சவால்களுக்கு மத்தியில் தலைமையேற்று வழிநடத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பெரிய சவால்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. அந்த அழுத்தத்தின் ஊடே அரசாங்கத்தை நிர்வகிக்கிறோம். இந்த சவால்களைச் சுமக்க அதற்கு தீர்வு காண புதிய வலுவான தோள்கள் தேவை. அதனால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இருப்பினும், நியூசிலாந்து மக்கள் என்னை எப்போதும் அன்பான தலைவராக நினைவில் கொள்வார்கள் என நம்புகிறேன். நியூசிலாந்து தலைமைப் பொறுப்பை நான் ராஜினாமா செய்யும் இச்சூழலில் நான் உங்களுக்கு சில உணர்வுகளை விட்டுச் செல்வதாக நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும்," அன்பானவராக இருக்கும்போது வலுவானவாராகவும் இருக்கலாம். மற்றவர்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும்போது முடிவெடுக்கும் தன்மையையும் பெறலாம். நேர்மறை சிந்தையுடன் பணியில் கவனத்தைக் குவிக்கலாம். நீங்கள் உங்கள் பாணியில் ஒரு தலைவராக இருக்கலாம். எப்போது ராஜினாமா செய்வது என்று தெரிந்திருக்கும் தலைவராக இருக்கலாம். இதை நான் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். எனது தலைமையிலான அரசு காலநிலை மாற்றம், சமுதாய குடியிருப்புகள் அமைத்தல், குழந்தைகளின் வறுமையை ஒழித்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளது" என்று கூறியுள்ளார்.