மலேரியாவை ஒழித்துக்கட்ட மகத்தான ஆயுதம்: நம்பிக்கையளிக்கும் புதிய தடுப்பூசி!

மலேரியாவை ஒழித்துக்கட்ட மகத்தான ஆயுதம்: நம்பிக்கையளிக்கும் புதிய தடுப்பூசி!

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக, மலேரியா நோயைத் தடுக்கும் திறன் கொண்ட தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் மருத்துவத் துறை தொடர்ந்து பாடுபட்டுவருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஏராளமான குழந்தைகளைப் பலிவாங்கும் நோய் இது. 1940-களில் முதல் முறையாக, இதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசி, மருத்துவ ரீதியான பரிசோதனை மூலம் சோதிக்கப்பட்டது. இதுவரை 140 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், ஜிஎஸ்கே நிறுவனத்தின் ‘ஆர்டிஎஸ்,எஸ்’ (RTS,S) எனும் தடுப்பூசிதான் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மாஸ்கியூரிக்ஸ் (Mosquirix) எனும் பொதுவான பெயரால் அந்தத் தடுப்பூசி அழைக்கப்படுகிறது. மலேரியா என்பது கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் கரோனா வைரஸைவிடவும் மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது மலேரியா ஒட்டுண்ணி. அளவில் பெரியதும்கூட.

இந்நிலையில் இன்னும் அதிக வீரியமான தடுப்பூசியாக ஆர்21 (R21) தடுப்பூசி உருவாகியிருக்கிறது. இதைப் பயன்படுத்தி 2040-ம் ஆண்டுவாக்கில் மலேரியா மரணங்களுக்கு முடிவுகட்டலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ஆபத்பாந்தவனான ஆக்ஸ்போர்டு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் ட்ராபிக்கல் மெடிசின், நோவாவாக்ஸ், இந்தியாவின் சீரம் நிறுவனம், புர்க்கினா ஃபாசோ நாட்டில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து ஆர்21 தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுவருகின்றன.

2019-ல், மலேரியா சீஸன் உச்சமடைவதற்கு முன்பு புர்க்கினோ ஃபாசோ நாட்டைச் சேர்ந்த 400 குழந்தைகளிடம் இந்தத் தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் செலுத்தப்பட்டன. பின்னர் 12 மாதங்கள் கழித்து ஒரு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது.

இந்த மூன்று தடுப்பூசிகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துணைப் பொருள் கொண்ட பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி பலன் தந்திருக்கிறது. குறைந்த திறன் கொண்ட துணைப்பொருளுடன் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்ட குழந்தைகளில் 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசியால் பலன் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள் லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கின்றன.

இது மருத்துவ நிபுணர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா தடுப்பூசிகளில் இதுதான் சிறந்தது என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அஸ்ட்ராஜெனகா கரோனா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் ஆட்ரியன் ஹில், இந்தத் தடுப்பூசி 2030-ம் ஆண்டுவாக்கில் மலேரியா மரணங்களில் 70 சதவீதம் குறைத்துவிடும் என்றும், 2040-ம் ஆண்டுவாக்கில் மலேரியா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றும் நம்புகிறார்.

மருத்துவ நிபுணர்களின் இந்தக் கனவு நிறைவேற இன்னும் சில படிகள் இருப்பது கவனிக்கத்தக்கது. காரணம், இந்தத் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு அந்நிறுவனம் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பிரிட்டனின் புதிய பிரதமராகியிருக்கும் லிஸ் ட்ரஸ், மருத்துவ ஆய்வுகளுக்கான நிதியைக் குறைக்காமல் இருக்க வேண்டும் என்பது மருத்துவ நிபுணர்களின் கோரிக்கை. நிதி குறைக்கப்பட்டால் அல்லது நிறுத்தப்பட்டால் தடுப்பூசி உற்பத்தி முடங்கிவிடும் என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தியாவின் சீரம் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 200 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தயாராக இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் குழந்தைகளைத் தடுக்க முடியும். உலக சுகாதார நிறுவனம் பச்சைக்கொடி காட்டிவிட்டால் அது சாத்தியமாகும். பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in