குழந்தைகள் தவறிழைத்தால் பெற்றோருக்கு தண்டனை?

சீனர்களை மிரட்டும் புதிய சட்டம்
குழந்தைகள் தவறிழைத்தால் பெற்றோருக்கு தண்டனை?

சீனாவில் இனி குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அதற்கான தண்டனை பெற்றோரையே போய்ச் சேரும். இது வெறும் நன்னெறி வாக்கல்ல; நடைமுறைக்கு வர இருக்கும் சட்டம்!

உள்ளீடற்ற மக்கள் திரள்

உலக மக்கள்தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தபோதும், அது குறித்து அந்நாடு பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை. இளையோரை விட முதியோரே அதிகமாக இருப்பதும், மிச்சமிருக்கும் இளைய வயதினரும் சுரத்தில்லாது வளர்ந்திருப்பதும் சீன அரசுக்கு பெருங்கவலை தந்திருக்கிறது. எனவே அர்த்தமுள்ள மனிதவளத்தை திரட்ட, பல புதிய திட்டங்களை வடித்து செயலாக்கம் தந்து வருகிறது. வளர்ந்த இளைஞர்களை வழிப்படுத்துவதற்கு அப்பால், வளரும் குழந்தைகள் மீது கவனம் காட்டும் புதிய சட்டங்களையும் இயற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது.

தண்டனை பெற்றோருக்கு!

அவற்றை ‘குடும்பக் கல்வி முன்னேற்றும் சட்டம்’ என்ற தலைப்பில் பல்வேறாக தொகுத்துள்ளது. அதில் ஒன்றாக குழந்தைகளின் ஒழுங்கீனம், குற்றச் செயல்கள், முறை தவறல்கள் ஆகிய அனைத்துக்கும் பெற்றோர் அல்லது காப்பாளரே பொறுப்பாளராகிறார். வீடு, பள்ளி, சமூகம் என எந்த இடத்திலும் ஒழுக்கம் தவறிய, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால் அதற்கான தண்டனைக்கு பெற்றோர் தயாராக வேண்டும். சட்டத்தின் நோக்கம் பெற்றோரை தண்டிப்பதல்ல; அவர்களை குழந்தைகள் வளர்ப்பில் வலிய ஈடுபடுத்துவதே என்கிறார்கள் அதன் ஆதரவாளர்கள்.

போதிய நேரம் ஒதுக்குங்கள்

அந்த வகையில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு போதிய நேரம் ஒதுக்கவும், சேர்ந்து விளையாடவும், உடற்பயிற்சிகள் செய்யவும் புதிய சட்டம் வலியுறுத்துகிறது. சமூகக்கேடுகள் அதிகரிப்பதன் பின்னணியில், குழந்தைகளுக்கு உருப்படியான நேரம் ஒதுக்காத பெற்றோர்கள் இருப்பதான புள்ளிவிபரங்களை இந்த சட்ட முன்வரைவு அடுக்குகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி கிடப்பது, இன்டர்நெட் பிரபலங்களை கண்மூடித்தனமாய் தொழுவது, அவர்களைப் போன்றே உடுத்துவதில் தொடங்கி தகாத சீரழிவுகளில் கீழிறங்குவதுவரை, குழந்தைகளின் தடம்புரளல் அனைத்துக்கும் பெற்றோரின் வளர்ப்பையே சுட்டிக்காட்டுகிறது சீனாவின் புதிய சட்டம்.

ஆன்லைன் விளையாட்டுக்கு கட்டுப்பாடு

சர்வதேச அளவில் சீனா பரப்பிவரும் ஆன்லைன் விளையாட்டுகள் எல்லாம் அயல்தேசத்துக் குழந்தைகள் சீரழிய மட்டும்தான்! உள்நாட்டைப் பொறுத்தவரை ஆன்லைன் விளையாட்டு மோகத்தைக் குறைக்க, பெருமளவிலான நடவடிக்கைகள் அங்கே அமலாகி வருகின்றன. ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி உடல்-மன நலன் கெடும் குழந்தைகளின் எண்ணிக்கை அங்கே அதிகரித்து வருவதை அடுத்து, அந்நாட்டின் கல்வி அமைச்சகம் சார்பில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த மாதம் அறிமுகமான அந்த வழிகாட்டுதல்களின்கீழ் வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதி தினங்களில் மட்டும் தினத்துக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுக்கு குழந்தைகளை அனுமதிக்கலாம். அதற்காக சதா படிக்கச் சொல்லி குழந்தைகளைப் பிழிந்துவிட முடியாது. குழந்தை நலன் சார்ந்த வரையறைகள் அதிலும் உண்டு. சிறப்பு பயிற்சியின் பெயரில் வார இறுதி தினங்களில் குழந்தைகளை நசுக்குவதற்கும், பள்ளிகள் வார இறுதியில் கூடுதல் வீட்டுப் பாடங்களை அளிப்பதற்கும் கூட கல்வி அமைச்சகம் அதிரடி தடை விதித்திருந்தது.

சர்ச்சையும் உண்டு

அதேசமயம் ஆண் பிள்ளைகளை பெண் தன்மையுடன் வளரவிடாது, ஆண்மை பொங்க வளர்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இணையத்தை வசீகரிக்கும் சில சீனத்துப் பிரபலங்களை பின்பற்றும் ஆண் குழந்தைகள், பெண் சாயலுக்கான விருப்பங்களில் ரசனைகள், உடைத்தேர்வுகளில் ஈடுபடுவது அங்கே அதிகரித்து வருவதை தடுக்கவும் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள்.

தடியால் அடித்து கனிய வைப்பது போன்று, குழந்தை வளர்ப்பை சட்டமியற்றி பெற்றோரை கட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு காலம் மோசமாகி வருகிறது போல! மோசமான குழந்தை வளர்ப்பால், பின்னாளில் குடும்பத்திலும் சமூகத்திலும் பிள்ளைகள் சேர்க்கும் சங்கடங்களைவிடவா பெற்றோருக்கு பெரிய தண்டனை கிடைக்கப்போகிறது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in