ரிஷி சுனக்: மனைவியால் பறிபோகிறதா பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு?

மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் ரிஷி சுனக்
மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் ரேஸில் முன்நிற்கும் ரிஷி சுனக், மனைவி அக்‌ஷதா மீதான வரி ஏய்ப்பு புகார்களால் மக்கள் செல்வாக்கில் எதிர்பாரா சரிவு கண்டிருக்கிறார். இதனையடுத்து ’அதிகாரபூர்வ டௌனிங் தெரு வீட்டை காலி செய்கிறார், தீவிர அரசியலில் இருந்து விலகப்போகிறார்’ என்றெல்லாம் ரிஷி குறித்து லண்டன் ஊடகங்கள் வரிந்து எழுதி வருகின்றன. ஆனால், தனது கடும் உழைப்பால் இளம் வயதிலேயே பிரிட்டன் பிரதமர் நாற்காலியை நோக்கி முன்னேறியிருக்கும் ரிஷி சுனக், அரசியல் போரில் அவ்வளவு எளிதில் புறமுதுகிட மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் அடித்து சொல்கின்றனர்.

பிரிட்டனின் தற்போதைய பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நீடிக்கும் குற்றச்சாட்டுகள், குறையும் மக்கள் அபிமானம் ஆகியவற்றால் அங்கே அடுத்த பிரதமருக்கான பரிசீலனை மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான முன்னெடுப்புகளுக்கு அப்பால், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தலைவரை தீர்மானிக்கும் கருத்துக்கணிப்புகளும் அங்கே பல மாதங்களாக நடந்து வருகின்றன. போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகினால், தற்போது நிதியமைச்சராக விளங்கும் ரிஷி சுனக் பிரதமர் நாற்காலியை அலங்கரிப்பார் என்ற கணிப்புகள் வலுவடைந்தன.

நிதியமைச்சராக ரிஷி சுனக்
நிதியமைச்சராக ரிஷி சுனக்

ரிஷி சுனக்கின் கல்வி, நிர்வாகத் திறமை, சர்வதேச நிதி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றோடு கரோனா காலத்தில் சாதுரியமாக செயல்பட்டதும் அவர் மீதாக அதிகரித்த மக்கள் அபிமானத்துக்கு காரணமாகின. ஆனால் ரிஷி சுனக்கின் மனைவியை குறிவைத்து தற்போது எதிர்கட்சிகள் எழுப்பிவரும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளால், ரிஷி சுனக்கின் பிரதமர் கனவு கலைந்து வருகிறது.

2 தலைமுறைகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வெளியேறிய மூதாதையர்களால் இந்திய வம்சாவளியாக அடையாளம் காணப்படுகிறார் ரிஷி சுனக். பிரிட்டன் குடிமகனான ரிஷி சுனக், இந்திய பெண்ணான அக்‌ஷதா மூர்த்தியை மணந்ததன் மூலம் தனது தொப்புள்கொடி உறவை மேலும் வலுப்படுத்திக்கொண்டார். இந்த அக்‌ஷதா ரிஷி சுனக்கின் மனைவியான பின்னரும் பிரிட்டன் குடியுரிமையை கோராதிருந்தார். இங்கிலாந்தின் சட்டப்படி இதற்கு உரிமை உண்டு.

இவ்வாறு குடியுரிமை பெறாது பிரிட்டனில் வசிப்பவர்கள், அந்நாட்டில் ஈட்டும் வருவாய்க்கு வரி செலுத்தினால் மட்டும் போதும். இந்த வகையில் பிரிட்டனில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் அக்‌ஷதா அவற்றின் வருவாய்க்கான வரியை மட்டுமே பிரிட்டன் சட்டத்துக்கு உட்பட்டு செலுத்தினார். ஆனால் தனது இந்திய சொத்துக்களுக்கான வரியை அவர் பிரிட்டனில் செலுத்தவில்லை. இந்த விவகாரம்தான் எதிர்கட்சியினரால் ரிஷி சுனக்குக்கு எதிராக பலமாக தொடுக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் நிறுவனர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி. இவரது மகளான அக்‌ஷதா மூர்த்திக்கு இன்போசிஸில் கணிசமான பங்குகள் உண்டு. இங்கிலாந்து ராணியின் சொத்துக்களோடு ஒப்பிடுகையில், அக்‌ஷதா வசமுள்ள இந்த பங்குகளின் மதிப்பு மட்டுமே இரண்டு மடங்கைத் தாண்டும். இது தவிர பன்னாட்டளவிலும் பல்வேறு நிறுவனங்களை அக்‌ஷதா நடத்தி வருகிறார். பிரிட்டன் பிரதமர் நாற்காலியை ரிஷி சுனக் நெருங்கும் தருணத்தில், அரசியல் எதிரிகளின் கண்களை அக்‌ஷதாவின் சொத்துக்கள் உறுத்த ஆரம்பித்திருக்கின்றன.

மூர்த்தி -சுதா தம்பதியுடன், ரிஷி - அக்‌ஷதா தம்பதி
மூர்த்தி -சுதா தம்பதியுடன், ரிஷி - அக்‌ஷதா தம்பதி

நாட்டின் நிதியமைச்சராக ரிஷி சுனக் இருப்பதன் மூலம், மனைவியின் சொத்துக்களுக்கு வரி கட்டாது முறைகேடு செய்திருப்பதாக குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர். அக்‌ஷதாவின் இன்போசிஸ் பங்குகளுக்கான டிவிடெண்ட் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் பலநூறு கோடிகள் வருமானமாக கிடைக்கும். இந்த இந்திய வருமானத்துக்கு இந்திய சட்டத்துக்கு உட்பட்டு வரி கட்டவும் செய்கிறார் அக்‌ஷதா. ஆனால், ’வரி ஏய்ப்புக்காக இந்தியாவின் மகளாகவும் இங்கிலாந்தின் மருமகளாகவும் நீடிக்கும் அக்‌ஷதா..’ என்று எதிர்கட்சிகள் பழி சுமத்தியதும் ரிஷி வெகுண்டெழுந்தார். ’மனைவியின் தாய்நாட்டு உரிமையில் தன்னால் தலையிட முடியாது’ என பதிலடி கொடுத்தார். வயதான தாய் தந்தையரை பின்னாளில் கவனித்துக்கொள்ளவே அக்‌ஷதா தனது இந்தியக் குடியுரிமை தக்க வைத்திருப்பதாக இதன் பின்னணியில் சொல்லப்பட்டது.

குழந்தைகளுடன் ரிஷி - அக்‌ஷதா
குழந்தைகளுடன் ரிஷி - அக்‌ஷதா

தனது சொத்து விவகாரத்தால் கணவரின் அரசியல் வாழ்க்கையில் களங்கம் விளைவிப்பதை கண்ட அக்‌ஷதா வெள்ளியன்று (ஏப்.8) புதிய முடிவை அறிவித்தார். ”எனது தாய்நாடு இந்தியா. நான் இந்தியாவின் மகள் என்பதில் மாற்றமில்லை. அதேவேளையில் எனது குழந்தைகள் இங்கிலாந்தின் குடியுரிமை பெற்றவர்கள். எனது தொழில்கள் மற்றும் அவற்றின் வருமானம் காரணமாக எனது கணவரின் அரசியல் கடமைகள் பாதிக்கப்படக்கூடாது என கருதுகிறேன். எனவே இந்தியா உட்பட பிரிட்டனுக்கு வெளியே நான் ஈட்டும் வருமானத்துக்கும் இனி பிரிட்டனில் வரி கட்ட முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்னொரு அஸ்திரத்தை எதிர்கட்சிகள் எடுத்திருக்கின்றன. ’அமெரிக்காவில் பணியாற்றியபோது பெற்ற ’க்ரீன் கார்ட்’ சலுகையை பிரிட்டனின் எம்பியான பின்னரும் ரிஷி சுனக் துறக்காது வைத்திருந்தார்’ என்ற புதிய சர்ச்சையின் மூலம் ரிஷியின் தேசப்பற்றை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இந்த தொடர் தாக்குதல்கள் ரிஷியை சோர்வடைய செய்துள்ளன. இதன் எதிரொலியாக தீவிர அரசியலில் இருந்தே தற்காலிகமாக விலகப்போவதாகவும் செய்திகள் வட்டமடித்தன. பிரிட்டன் பிரதமர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் வசிக்கும் டௌனிங் தெருவின் வசித்து வந்த வீட்டை ரிஷி - அக்‌ஷதா தம்பதியினர், ஞாயிறு அன்று அங்கிருந்து காலி செய்ததாக வெளியாகும் தகவல்கள் இதற்கு கட்டியம் சொல்கின்றன.

பிரிட்டன் அரசியலிலிருந்து மெய்யாலுமே ரிஷி சுனக் பின்வாங்குகிறாரா அல்லது தேர்ந்த அரசியல்வாதியின் நுணுக்கத்தோடு பாய்வதற்காக பதுங்குகிறாரா என்பது முழுமையாக தெரிந்தபாடில்லை. பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கான மக்கள் ஆதரவு அதளபாதாளத்தில் விழுந்தபோது, அடுத்த பிரதமருக்கான மக்கள் அபிமானத்தில் முன் நின்றார் ரிஷி சுனக். ஆனால் மனைவியின் வரி விவகாரம் மற்றும் அவை தொடர்பான சர்ச்சைகளால், அந்த மக்கள் அபிமானத்தின் கணிப்பில் மூன்றில் ஒரு பங்காக தற்போது சரிந்திருக்கிறார் ரிஷி சுனக். இப்படி இழந்த செல்வாக்கை மீட்பதற்காக ரிஷி அரசியல் சதுரங்கம் ஆடுகிறார் என்றும் சொல்கிறார்கள்.

அதற்கேற்ப மனைவியின் வருமானம் மற்றும் வரி தொடர்பான அரசு ஆவணங்கள் கசிந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பி இருக்கும் ரிஷி சுனக், அவை தொடர்பான விசாரணைக்கும் அரசிடம் கோரி உள்ளார். பிரதமர் அலுவலத்திலிருந்தே இந்த கசிவு வெளியிடப்பட்டதாகவும் ரிஷி சுனக் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டை பிரதமர் போரிஸ் ஜான்சன் வேகமாய் மறுத்திருப்பதும் மேலும் ஐயத்தை அதிகமாக்கி உள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சனுடன்..
பிரதமர் போரிஸ் ஜான்சனுடன்..

பிரிட்டன் பிரதமராவதற்கான போட்டியில், எதிர்கட்சி எதிரிகள் மற்றும் சொந்தக் கட்சியின் துரோகிகளை ஒருசேர ரிஷி சுனக் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அரசியல் இக்கட்டுகளிலிருந்து சாதுரியமாய் மீண்டெழுவதுடன், சரிந்த மக்கள் செல்வாக்கையும் மீட்பாரெனில், பிரிட்டன் பிரதமர் நாற்காலிக்கான முழுத் தகுதிக்கும் உரியவராகி விடுவார் ரிஷி சுனக்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in