நாடு திரும்பும் நவாஸ் ஷெரீஃப்: அடுத்து என்ன நடக்கும்?

நாடு திரும்பும் நவாஸ் ஷெரீஃப்: அடுத்து என்ன நடக்கும்?

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் பதவியேற்றிருக்கும் நிலையில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீஃப் மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது. லண்டனில் வசித்துவரும் நவாஸ் ஷெரீஃப், மே மாதம் ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர் நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்புவார் என அக்கட்சியின் மூத்த தலைவரான மியான் ஜாவேத் லத்தீஃப் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாகக் கூட்டணிக் கட்சியினரிடம் பேசப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

2017-ல் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் நவாஸ் ஷெரீஃபின் பெயர் அடிபட்டதையடுத்து அவர் மீதான ஊழல் புகார்கள் பிரளயமாக வெடித்தன. இதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். ‘புத்திக்கூர்மை கொண்டவராக, நியாயமானவராக, தீயவரல்லாதவராக, நேர்மையானவராக, அமீனாக இருக்க வேண்டும் என்று வரையறுக்கும் அரசியல் சட்டக் கூறு 62(1)(எஃப்)-ஐ நவாஸ் ஷெரீப் மீறிவிட்டார் என்று தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. ‘அமீன்’ என்றால், ‘நம்பிக்கையைக் கட்டிக்காப்பவர்’ என்று அர்த்தம். பொதுவாழ்வில் ஈடுபட தகுதியில்லை என்றே உச்ச நீதிமன்றம் அவரை விலக்கிவைத்தது.

மூன்று முறை பதவிநீக்கம் செய்யப்பட்டவர் நவாஸ் ஷெரீஃப். முதல் முறை அதிபரால்; இரண்டாவது முறை ராணுவத்தால்; மூன்றாவது முறை உச்ச நீதிமன்றத்தால். இந்த முறை இம்ரான் கான் எதிர்கொண்ட பல விமர்சனங்களைத் தனது ஆட்சிக்காலங்களில் நவாஸ் ஷெரீஃபும் எதிர்கொண்டிருக்கிறார். இன்றைக்கு ‘இந்தியாவுக்கே போய்விடுங்கள்’ என நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் ஷெரீஃபால் விமர்சிக்கப்படும் இம்ரான் கான், ஒரு காலத்தில் நவாஸ் ஷெரீஃப் அரசு இந்தியாவிடம் மென்மையான அணுகுமுறையைக் கையாள்வதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாகப் பிரதமர் பதவியில் அமர்ந்த பின்னர், இம்ரான் கானைப் போலவே வெளியுறவுக் கொள்கையில் சுதந்திரமாகச் செயல்பட விரும்புவதாக நவாஸ் ஷெரீஃப் கூறியது அவரது ஆட்சியை அதிபர் கலைப்பதற்கு வழிவகுத்தது.

பனாமா பேப்பர்ஸ் மட்டுமல்லாமல், நவாஸ் ஷெரீஃப் மீது இம்ரான் கான் அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. 2019-ல், அவரது உடல்நிலை மோசமானத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு லாகூர் உயர் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. நான்கு வாரங்களுக்குத்தான் அந்த அனுமதி என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. நான்கு வாரங்களில் அல்லது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர் அவர் நாடு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கிடையே, அல்-அஸிஸியா மில்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவர் நாடு திரும்பாததால், அவர் தலைமறைவாகிவிட்டதாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அல்-அஸிஸியா மில்ஸ் ஊழல் வழக்கில் அவருக்கு எதிராகப் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. “நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்பினால் கைதுசெய்யப்படுவார்” என இம்ரான் கான் எச்சரித்திருந்தார். இன்றைக்கு அரசியல் சூழல் முற்றிலுமாக மாறியிருக்கும் நிலையில், நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானுக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்பது முக்கியமான கேள்வியாகியிருக்கிறது.

நவாஸ் ஷெரீஃபின் தம்பியான ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு தற்காலிகமானது. அடுத்து தேர்தல் நடத்தப்பட்டால்தான் உறுதியான அரசு அமையும். அதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி கருதுகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வெளிநாட்டிலிருந்து வாக்குப் பதிவுசெய்யும் முறை ஆகியவை குறித்துப் பல கேள்விகளையும் அக்கட்சி முன்வைத்திருக்கிறது.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, ஷெபாஸ் ஷெரீஃப் என உச்சரிப்பதற்குப் பதிலாக நவாஸ் ஷெரீஃப் என்றே சபாநாயகர் அயாஸ் சாதிக் கூறினார். பின்னர் தனது தவறைத் திருத்திக்கொண்ட அவர், நவாஸ் ஷெரீஃபே தனது சிந்தனையில் நிறைந்திருப்பதாக விளக்கமளித்தார்.

ஆக, நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்பி, சட்டச் சிக்கல்கள் இல்லாமல் இருந்தால் அடுத்து தேர்தலில் அவரே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றே கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in