வாடிகனில் நவீன் பட்நாயக்: போப்பாண்டவரைச் சந்தித்த முதல் முதல்வர்!

வாடிகனில் நவீன் பட்நாயக்: போப்பாண்டவரைச் சந்தித்த முதல் முதல்வர்!

உணவுப் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் ஒடிசா மாநிலம் அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்த தகவல்களை உலக உணவுத் திட்டத்திடம் (டபிள்யூ.எஃப்.பி) பகிர்ந்துகொள்வதற்காக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், இத்தாலி தலைநகரான ரோமுக்குச் சென்றிருக்கிறார். ஐநா-வின் முக்கியப் பிரிவான உலக உணவுத் திட்டத்தின் தலைமையகம் ரோமில் அமைந்திருக்கிறது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக வாடிகன் சென்ற அவர் அங்கு போப் பிரான்சிஸை இன்று சந்தித்தார்.

சனிக்கிழமை (ஜூன் 18) டெல்லியைச் சென்றடைந்த பட்நாயக், அங்கு சில பணிகளை முடித்துக்கொண்டு திங்கள்கிழமை ரோமுக்குப் புறப்பட்டார். மொத்தம் 10 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்தின் மூலம் ஒடிசாவுக்கு முதலீடுகளை ஈர்க்க நவீன் பட்நாயக் திட்டமிட்டிருக்கிறார். இந்தியா திரும்பும் வழியில் ஜூன் 29-ல் துபாய் செல்லும் நவீன் பட்நாயக், மத்தியக் கிழக்கு நாடுகளின் முதலீட்டாளர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்நிலையில், இன்று அவர் வாடிகன் சென்று போப் பிரான்சிஸைச் சந்தித்துப் பேசினார். இந்திய மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் இதுவரை வாடிகனுக்கு நேரில் சென்று போப்பாண்டவரைச் சந்தித்ததில்லை. அந்த வகையில் வாடிகனில் போப்பாண்டவரைச் சந்தித்த முதல் முதல்வர் எனும் பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இந்தப் பயணத்தின்போது போப்பாண்டவரை அவர் சந்திப்பது பயணத்திட்டத்தில் பிரதானமாகத் திட்டமிடப்படவில்லை என்றாலும், போப் பிரான்சிஸுடனான அவரது சந்திப்பு இந்தப் பயணத்தின் முத்தாய்ப்பாக அமையும் என சில நாட்களுக்கு முன்பே சர்வதேசப் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நேற்று ரோமில் உள்ள பியாஸா காந்தி நினைவிடத்துக்குச் சென்ற நவீன் பட்நாயக், அங்கு உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தார். அப்போது பேசிய அவர், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகள் தனக்குப் பெரும் தாக்கம் தந்ததாகக் குறிப்பிட்டார்.

22 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராகப் பதவிவகிக்கும் நவீன் பட்நாயக், முதல்வர் எனும் முறையில் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இது. இதற்கு முன்னர் 2012-ல் அவர் பிரிட்டன் சென்றிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in