ஆர்க்டிக் பகுதியைக் குறிவைக்கும் ரஷ்யா, சீனா: அமெரிக்காவுக்கு ஆபத்தா?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

கனடாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவும் சீனாவும் மேற்கொண்டுவரும் திட்டங்கள் குறித்தும், அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட வடக்கு அமெரிக்க நாடுகள் எதிர்கொண்டிருக்கும் அபாயம் குறித்தும் எச்சரித்திருக்கிறார்.

கனடாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஆல்பெர்ட்டா மாகாணத்தின் கோல்டு லேக் பகுதியில் அமைந்திருக்கும் கனடா ராணுவ தளத்தை நேற்று பார்வையிட்ட ஸ்டோல்டென்பெர்க், பூமியின் வட துருவப் பகுதியான ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா அமைத்துவரும் ராணுவக் கட்டுமானங்கள் குறித்துப் பேசினார்.

“ஆர்க்டிக் பகுதியில் புதிய ஆர்க்டிக் கமாண்ட் படையை ரஷ்யா அமைத்திருக்கிறது. சோவியத் ஒன்றிய காலகட்டத்தில் மேற்கொண்டதுபோன்ற ஆர்க்டிக் ராணுவத் தளங்கள், விமானப் படைத் தளங்கள், ஆழ்கடல் துறைமுகங்கள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. புதிய தளங்கள், புதிய ஆயுதங்கள் ஆகியவற்றுடன், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைச் சோதிக்கும் தளங்களையும் ரஷ்யா அமைத்திருக்கிறது” என்று கூறிய அவர், வட அமெரிக்கா மீது ஏவுகணைகளைச் செலுத்த வட துருவம் ஒரு குறுக்கு வழியாக ரஷ்யாவுக்குப் பயன்படக் கூடும் என்றும் எச்சரித்தார். வட அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்க்டிக் பகுதியில் சீனாவின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பேசினார். சீனா தன்னை ‘புதிய ஆர்க்டிக்’ தேசமாக அறிவித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பனிக்கட்டிகளை உடைக்கும் உலகின் மிகப் பெரிய ஐஸ்பிரேக்கர் கப்பலை உருவாக்க சீனா திட்டமிடுவதாகக் கூறினார். அத்துடன் வட துருவத்தில் எரிசக்தி, உட்கட்டுமானம், ஆய்வுத் திட்டங்கள் என பில்லியன் கணக்கான டாலர்களை சீனா செலவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

நேட்டோவில் சேர உக்ரைன் முன்வந்ததைக் கண்டித்துதான் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளரின் விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கை கவனம் பெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in