விரைவில் ரஷ்யா - நேட்டோ மோதல்?

நேட்டோ பொதுச்செயலர் ஆருடம்
விரைவில் ரஷ்யா - நேட்டோ மோதல்?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், விரைவில் ரஷ்யா - நேட்டோ நாடுகள் இடையிலான போராக வலுக்க வாய்ப்புள்ளதாக, நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் கவலை தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் களத்தில் இறங்குவது, மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் என்பதே இந்த கவலையின் பின்னே இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் நிறைவாக நேட்டோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா ஆகிய வட அமெரிக்க தேசங்களும், 28 ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பே நேட்டோ. கூட்டமைப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு போர் அச்சுறுத்தல் எழுந்தால், அதற்கு ஆதரவாக ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளும் களமிறங்கும் என்பது நேட்டோ ஒப்பந்தத்தின் அடிப்படைகளில் ஒன்று.

சோவியத் ஒன்றியம் சிதறியதில் முளைத்த நாடுகளில் ஒன்று உக்ரைன். ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்புவதும், அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததுமே தற்போது நடந்துகொண்டிருக்கும் உக்ரைன் போருக்கு மூல காரணம். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கி 10 மாதங்களை கடந்து விட்டது. இந்த போரில் ரஷ்ய ராணுவ வல்லமையை சோதா உக்ரைன் எதிர்கொண்டு நிற்பதன் பின்னணியில் நேட்டோ தேசங்கள் இருக்கின்றன.

உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ களமிறங்கினால் அது அடுத்த உலகப் போராக மாறும் ஆபத்து இருப்பதால், நேட்டோ தேசங்கள் மறைமுகமாக உக்ரைனுக்கு உதவி வருகின்றன. நிதியுதவி, நவீன ஆயுதங்கள் வழங்கல் மட்டுமன்று ரஷ்யாவுக்கு எதிரான உளவுத் தகவல்களையும் உக்ரைனுக்கு நேட்டோ வழங்கி வருகிறது. இதனால் எரிச்சலுறும் ரஷ்யா, உக்ரைனில் நிலைகொண்டிருக்கும் நேட்டோ பயிற்சி மையங்களை தாக்கப்போவதாக அவ்வப்போது எச்சரித்து வருகிறது.

உக்ரைனில் இருக்கும் நேட்டோ முகாம்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், வேறுவழியின்றி நேட்டோ படைகள் நேரிடையாக போரில் குதிக்கும். உக்ரைன் - ரஷ்யா இடையிலான தற்போதைய போர், இந்த வகையில் நேட்டோ - ரஷ்யா இடையிலான போராக உருவெடுக்கும். இந்த வாய்ப்புக்காக காத்திருக்கும் ரஷ்யாவின் நேச தேசங்களான சீனா, வடகொரியா உள்ளிட்டவை அமெரிக்கா மீதான பழியை தீர்த்துக்கொள்ள முயலும். இந்த நகர்வுகளே உலகப் போராக வெடிக்கும்.

ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்
ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்

இவற்றை கருத்தில்கொண்டே, விரைவில் நேட்டோ - ரஷ்யா இடையிலான போருக்கு ஆருடம் தெரிவித்திருக்கிறார் நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலருமான ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க். நார்வே முன்னாள் பிரதமரான இவர், நார்வே தொலைக்காட்சி ஒன்றுக்கான பேட்டியில் நேட்டோ எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசும்போது இவற்றையும் தெரிவித்தார். அப்படியொரு தவிர்க்க இயலாத சூழல் எழுமெனில் அவற்றை எதிர்கொள்ளவும் நேட்டோ தயாராக உள்ளதாகவும் அவர் உறுதி செய்துள்ளார். முதல்கட்ட தாக்குதல்கள் ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் இடையே மூளும் என்றும், படிப்படியாக அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நேரடி போராக மாறும் என்றும் இவர் கணித்துள்ளார்.

நாஸ்ட்ரடாமஸ் உட்பட நீண்ட கால ஆருடங்கள் பலவும் 2023-இல் உலகப்போர் தொடங்கும் என்று கணித்திருக்கின்றன. இந்த வரிசையில், உக்ரைன் - ரஷ்ய மோதலை உன்னிப்பாக ஆராந்து வரும் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் போன்றோரும் சேர்ந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in