நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சேதம்: விண்வெளிப் பாறை மோதியது!

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சேதம்: விண்வெளிப் பாறை மோதியது!

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWST) மே மாதம் நடந்த விண்வெளிப் பாறை தாக்குதலால் பெரிய அளவிலான சேதத்தை சந்தித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் கனட விண்வெளி நிறுவனம் (CSA) இணைந்து உருவாக்கியது. மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி தொலைநோக்கியில் மிகப்பெரிய கண்ணாடி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அகச்சிவப்புக் கதிர்களால் ஏற்படும் ஒளியானது இந்த தொலைநோக்கியை பாதிக்கக்கூடாது என்பதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது.

பெருவெடிப்புக்குப் பிறகு என்ன நடந்தது, விரிவடையும் பிரபஞ்சம் எவ்வாறு குளிர்ந்து கருந்துளைகள்,விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் மனிதர்களை உருவாக்கியது, பூமிக்கு அப்பால் உயிர்ப்புள்ள கோள்கள் உள்ளனவா, முதல் நட்சத்திரம் எப்படி உருவானது என்பதை கண்டறியும் நோக்கத்துடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமது சூரிய குடும்பத்தில் உள்ள மர்மங்களைத் தீர்க்கும் என்றும், மற்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள தொலைதூர உலகங்களுக்கு அப்பால் பார்க்க உதவும் என்றும், நமது பிரபஞ்சத்தின் மர்மமான கட்டமைப்புகள்,தோற்றம் மற்றும் அதில் உள்ள நமது இடத்தை ஆராயும் என்றும் நாசா தெரிவித்தது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற இன்னும் பல ஆண்டுகள் இந்த தொலைநோக்கி செயல்பட வேண்டும். ஆனால் மே 2022 இல் நடந்த விண்வெளிப்பாறை தாக்குதலால் தொலைநோக்கி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் ஆயுட்காலம் குறித்து இப்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் 25 -ம் தேதி ஏவப்பட்டதிலிருந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆறு மைக்ரோ விண்கற்களால் தாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஐந்து விண்கற்கள் மிகக் குறைவான சேதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஆறாவது விண்கல் ஜேம்ஸ் வெப்-க்கு சில சேதங்களை ஏற்படுத்தியது.

இது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கிய ஆராய்ச்சியாளர்கள், “22-24 மே 2022 காலகட்டத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் சி3 பகுதியைத் தாக்கிய மைக்ரோமீட்ராய்டு அந்த பிரிவின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க திருத்த முடியாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், முழு தொலைநோக்கி மட்டத்தில் இந்த விளைவு சிறியதாக இருந்தது, ஏனெனில் தொலைநோக்கியின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டது.

தொலைநோக்கியின் பேனல்களில் ஒன்றில் சேதம் ஏற்பட்டுள்ளதால், அது வெப் தொலைநோக்கியின் படம் எடுக்கும் திறன்களை பாதிக்காது. இருப்பினும், அதன் கண்ணாடிகள் மற்றும் சூரியக் கவசங்கள் மைக்ரோமீட்ராய்டு தாக்கங்களினால் தவிர்க்க முடியாமல் மெதுவாக சிதைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், சார்ஜ் செய்யப்பட்ட துகள்களால் வெப் டிடெக்டர்கள் படிப்படியாக சேதமடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே தொலைநோக்கியின் கண்ணாடி விண்வெளியில் வெளிப்படுவதால் இனி மைக்ரோமீட்ராய்டு தாக்குதல்களை ஜேம்ஸ் வெப் தவிர்ப்பது கடினம்” என்று தெரிவித்தனர்.

9.7 பில்லியன் டாலர் செலவில் ஏவப்பட்ட இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த மிகவும் பிரமிக்கத்தக்க பிரபஞ்சத்தின் புகைப்படங்களை நாசா கடந்த வாரம் வெளியிட்டது. அகச்சிவப்புக் கதிர்களின் ஒளியால் இதுவரை காணமுடியாத மங்கலான பொருள்கள் உட்பட ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களை இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தியது உலகமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in