சூரியப் புன்னகை: சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட நாசா!

சூரியப் புன்னகை: சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட நாசா!

குழந்தைகள் வரையும் ஓவியங்களில் சூரியன், நிலவு என அனைத்திலும் மனித முகத்தின் சாயல் இருக்கும். பெரும்பாலும் அவை புன்னகைக்கும் வகையிலேயே வரையப்பட்டிருக்கும். இந்நிலையில், நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று எடுத்த புகைப்படத்தில் சூரியன் புன்னகைப்பதுபோல் காட்சியளிப்பது இணையவாசிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்ஸர்வேட்டரி எனும் திட்டம் 2010 பிப்ரவரி 11-ல் தொடங்கப்பட்டது. விண்வெளி வானிலையில் சூரிய வெப்பத்தின் தாக்கம் குறித்து ஆராயும் இந்த அமைப்பின் செயற்கைக்கோள், சூரியனின் உட்புறம், வளிமண்டலம், காந்தப்புலம் மற்றும் சூரியனிலிருந்து வெளியிடப்படும் ஆற்றல் ஆகியற்றையும் அளவீடு செய்கிறது.

சமீபத்தில் இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில்தான் சூரியனின் உருவம் புன்னகைப்பது போல் காட்சியளிக்கிறது.

இதுதொடர்பாக, ட்வீட் செய்திருக்கும் நாசா, ’புறஊதா ஒளியில், சூரியன் மீது காட்சியளிக்கும் இந்த இருண்ட பகுதிகள், கொரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளிலிருந்து சூரியக் காற்று விண்வெளியில் வெளியிடப்படும்’ எனத் தெரிவித்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த இணையவாசிகள் பலர் ஹாலோவீன் பூசணிக்காயில் தொடங்கி, சிரிக்கும் சிங்கம் வரை பல உவமைகளுடன் உற்சாகமாகப் பதிவிட்டுவருகின்றனர்.

பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும், இந்த சூரியப் புன்னகையைப் பார்த்து நாம் சந்தோஷப்படுவதைவிட கவலைப்படுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது. சனிக்கிழமை (இன்று) இந்த கொரோனல் துளைகள் மூலம் சூரியப் புயல் பூமியைத் தாக்கலாம் என ஸ்பேஸ்வெதர் எனும் இணையதளம் எச்சரித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in