இறுதிச் சடங்கின்போது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் அடுத்த சம்பவம்

இறுதிச் சடங்கின்போது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் அடுத்த சம்பவம்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் ரேசின் நகரில் நேற்று மதியம் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்வின்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் ரேசின் நகர காவல் துறையினர், ‘கிரேஸ்லாண்ட் மயானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வு நடந்தபோது மதியம் 2.26 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பலர் காயமடைந்திருக்கிறார்கள். ஆனால், எத்தனைப் பேர் என உறுதியாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது’ எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்திருக்கிறது. போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட டாஷேன்டே எல்.கிங் சீனியர் என்பவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி அது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகியிருக்கிறது. கடந்த மாதம் டெக்சாஸ் மாநிலத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். நியூயார்க் மாநிலத்தின் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

இப்படியான சம்பவங்கள் தொடர்வதால், துப்பாக்கிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் எனும் குரல்கள் அமெரிக்காவில் பரவலாக எழுந்திருக்கின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதை வலியுறுத்தியிருக்கிறார். துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான வயது வரம்பை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கும் அவர், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவருவதற்குக் குடியரசுக் கட்சியினர் சம்மதிக்காதது மனசாட்சியற்ற தன்மை கொண்டது என்று விமர்சித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in