லிபியாவை புரட்டிப்போட்ட புயல்; பலியானோர் எண்ணிக்கை 5,300யை தாண்டியது!

புயலால் உருக்குலைந்த லிபியா
புயலால் உருக்குலைந்த லிபியா

லிபியாவைப் புரட்டிப் போட்டிருக்கிறது புயல். இந்த புயல் மழை வெள்ளத்தில் 2 அணைகள் உடைந்ததன் காரணமாக திடீரென ஊருக்குள் புகுந்த நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 5,300யைத் தாண்டியுள்ளது. மேலும் காணாமல் போன பல்லாயிரம் மக்களின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லிபியாவில் பெய்து வரும் கனமழையால் கடலோர நகரமான டெர்னா அருகே இரண்டு அணைகள் உடைந்து, நகரின் பெரும்பகுதியை அழிவுக்கு ஆளாக்கியுள்ளது. டேனியல் என்று பெயரிடப்பட்ட புயல் லிபியாவை தாக்கும் முன்னரே, அங்கே ஆண்டுகள் கணக்கில் அரசியல் - அதிகார புயல் மையம் கொண்டிருந்தது. போட்டி ஆட்சியாளர்கள், முறையற்ற நிர்வாகம், பொதுநலனில் அலட்சியம் ஆகியவை காரணமாக, டேனியல் புயலை எதிர்கொள்ளும் வகையில் லிபியா தயாராக இருக்கவில்லை.

புயல், மழை லிபியாவை தாக்கியபோது முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்த 2 அணைகளும் வெடித்துச் சிதறின. டெர்னா நகரில் மட்டும் குறைந்தது 5,200 பேர் இறந்துள்ளனர். பல்லாயிரம் பேரை காணவில்லை. குறைந்தது 20,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வரும் நாட்களில் உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று பகீர் கிளப்புகிறது கள நிலவரங்கள்.

வட ஆப்பிரிக்காவின் மற்றொரு நாடான மொராக்கோ, நிலநடுக்கத்துக்கு ஆளாகி 2,900 பேருக்கும் அதிகமானோரை பலி கொடுத்ததற்கு சில தினங்கள் கழித்து டேனியல் புயல் லிபியாவை தாக்கியது. கிரீஸ், துருக்கி மற்றும் பல்கேரியாவில் புயலின் பாதிப்புகள் தென்பட்டபோதே லிபியா சுதாரித்திருப்பின், லிபியாவின் உயிர்ப்பலிகள் இந்தளவுக்கு அதிகரித்திருக்காது.

இயற்கை சீற்றத்துடன் மனிதர்களின் செயற்கை அலட்சியமும் சேர்ந்து லிபியாவில் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றன. வெள்ளம் உண்டாக்கிய சேதங்களில், உருக்குலைந்த சாலைகள் காரணமாக மீட்பு பணிகள் மற்றும் சர்வதேச உதவிகள், பேரிடர் பாதித்த இடங்களை அடைவதில் தடுமாறுகின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களைக் கொண்டிருந்த போதும், போட்டி அரசுகளின் அதிகாரப்போரில் சிக்கியதோடு, அவர்களின் அலட்சியம் மற்றும் ஊழலுக்கு மிகப்பெரும் விலையை லிபியா கொடுத்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in