ஹமாஸ் - கத்தார் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்... மேலும் பல பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்பு!

ஹாமாஸ் விடுவித்த அமெரிக்க தாய் - மகள்
ஹாமாஸ் விடுவித்த அமெரிக்க தாய் - மகள்

ஹமாஸ் அமைப்புடன் கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், ஹமாஸ் வசமிருக்கும் பிணைக் கைதிகளில் மேலும் பலர் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.

ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 2 வாரங்களாக நீடிக்கும் கொடூரத் தாக்குதல்களின் மத்தியில் முதல் முறையாக நம்பிக்கை கீற்று ஒன்று தென்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல் கஸாம் தனது வசமிருக்கும் சுமார் 200 பிணைக்கைதிகளில் இருவரை நேற்று விடுவித்தது. இதனைத் தொடர்ந்து மேலும் பலர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை எழுந்துள்ளது.

அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலின் அங்கமாக, இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக கசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர். இஸ்ரேல் மீதான் ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக அடுத்த 10 நாட்கள் காசா மீது குண்டுமழை பொழிந்து, இஸ்ரேல் தனது வெறியைத் தீர்த்துக்கொண்டது.

மகள் நடாலி ரானன், தாய் ஜூடித் ரானன்
மகள் நடாலி ரானன், தாய் ஜூடித் ரானன்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 1400 பேர் இறந்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேல் பதிலடியில் கசாவின் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருப்பதாக பாலஸ்தீனம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் தனது வான் தாக்குதல் மூலமாக காசாவை சிதைத்தப் பிறகு ஆசுவாசமாகி இருக்கிறது. இஸ்ரேலின் மிச்சமிருக்கும் ஒரே தலைவலி ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகள் மட்டுமே.

இஸ்ரேலிய குடிமக்கள், பாதுகாப்பு படையினர், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், வெளிநாட்டினர் என சுமார் 200 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களில் குழந்தைகள், பெண்கள், வயதானோர் உள்ளிட்ட சிவிலியன்கள் மீட்கப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் வளைகுடா தேசங்கள் வாயிலாக ஹமாஸ் அமைப்புக்கு அழுத்தம் தந்து வருகின்றன.

குறிப்பாக மேற்கு நாடுகளுக்கும் இஸ்லாமிய பயங்கரவாத குழுவினர்களுக்கும் பாலமாக இருக்கும் கத்தார் தேசம், ஹமாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. எகிப்து உதவியுடன் ஹமாஸ் பொறுப்பாளர்களிடம் பேசியதில், 2 அமெரிக்கர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் 2 தினங்களுக்குப் முன்னர் இஸ்ரேல் வந்து சென்றது, அமெரிக்க போர்க்கப்பல் மத்திய தரைக்கடலில் மையங்கொண்டிருப்பது, அமெரிக்கா - கத்தார் இடையிலான ஆழமான புரிந்துணர்வு, வான்வழித் தாக்குதலுக்கு அப்பால் இஸ்ரேலின் தரைப்படைகள் காசாவுக்குள் நுழைய ஆயத்தமானது... உள்ளிட்டவை 2 அமெரிக்கர்கள் மீட்புக்கு காரணமாயின.

ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகள் பட்டியல்
ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகள் பட்டியல்

தாய் ஜூடித் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ரானன் என 2 அமெரிக்கப் பெண்கள் விடுவிக்கப்பட்டிருப்பது, இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதலில் முக்கிய திருப்பமாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல வெளிநாட்டவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெருவிக்கின்றன.

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் சிலரைத் தவிர்த்து, பிணைக்கைதிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்படுவார்கள் என்றும், காசாவுக்குள் இஸ்ரேலிய தரைப்படைகளின் தாக்குதல் இதனால் ஒத்திவைக்கப்படும் என்றும், மரண ஓலம் எதிரொலிக்கும் காசாவில் சர்வதேச உதவிகள் முழுமையாக களமிறங்கும் என்றும்... அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தான நம்பிக்கை கீற்றுகள் அங்கே ஒளிரத் தொடங்கியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in