சவுதி பிரதமராகும் சல்மான்: கஷோகி படுகொலை வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியா?

முகமது பின் சல்மான்
முகமது பின் சல்மான்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அந்நாட்டின் புதிய பிரதமராக நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். சவுதி மன்னர் சல்மானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக அமெரிக்காவில் நடந்துவரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முகமது பின் சல்மான், சவுதியின் அதிகாரபூர்வ ஆட்சியாளராகப் பொறுப்பேற்பதன் மூலம் அவ்வழக்கிலிருந்து தப்பிக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் பின்னணி என்ன?

சவுதி தூதரக அலுவலகத்தில் நடந்த படுகொலை

சவுதி பத்திரிகையாளரான ஜமால் கஷோகி ஒரு காலத்தில் அரசின் செய்தித் தொடர்பாளர் போல செயல்பட்டவர். சவுதியின் அதிகார வட்டத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ‘அல் அராப் நியூஸ்’ சேனலின் தலைமை ஆசிரியராக இருந்த கஷோகி, ‘அல் வதான்’ எனும் நாளிதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். முற்போக்கான கருத்துகள் கொண்ட இதழாக அதை அவர் நடத்திவந்தது சவுதி அரசின் அதிருப்திக்குக் காரணமானது. அதற்காகவே அவர் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிவந்தது. 2015-ல் மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சவூதின் மகனான முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசரான பின்னர் நிலைமை இன்னும் மோசமானது. இதையடுத்து 2017 ஜூனில் சவுதியிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்ற கஷோகி, ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதிவந்தார். சவுதி அரசை, குறிப்பாக இளவரசர் முகமது பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் துருக்கியைச் சேர்ந்த ஹாட்டிஸ் செங்கிஸ் எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய கஷோகி, முதல் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பான ஆவணங்களைப் பெற, 2018 அக்டோபர் 2-ல் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றார். அதன் பின்னர் திரும்பவே இல்லை. இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஜமால் கஷோகி
ஜமால் கஷோகி

எனினும், கஷோகி சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டதுண்டமாக வெட்டப்பட்டதாகவும் தெரியவருவதாகக் கூறிய துருக்கி அரசு அதற்கான குரல் பதிவுகள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியது. இதையடுத்து, சவுதி தூதரக அலுவலகத்தில் கஷோகி கொல்லப்பட்டதை மட்டும் ஒருவழியாக ஒப்புக்கொண்ட சவுதி அரசு, அதற்கும் இளவரசருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துவிட்டது.

திருப்தி தராத தீர்ப்பு

இது தொடர்பாக, ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில், ஐந்து பேருக்கு மரண தண்டனையும், மூன்று பேருக்குச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முகமது பின் சல்மானுக்கு நெருக்கமான அல்-ஹடானி, சவுதி உளவுத் துறையின் முன்னாள் தலைவர் அகமது அல் அஸிரி ஆகியோர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டது. கஷோகியின் குடும்பத்தினர் அந்தத் தீர்ப்பை வரவேற்றனர். “சவுதியின் விசாரணையில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. எங்களுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று கஷோகியின் மகன் சலா கஷோகி கூறியிருந்தார். ஆனால், கஷோகியைத் திருமணம் செய்ய காத்திருந்த ஹாட்டிஸ் செங்கிஸ் இந்தத் தீர்ப்பால் கடும் அதிருப்தியடைந்தார்.

இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடக் கூடாது எனத் தீர்மானித்த அவர், 2020 அக்டோபரில் வாஷிங்டன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், முகமது பின் சல்மானின் தூண்டுதலின்பேரில் அவரது ஏஜென்ட்டுகள் கஷோகியைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து, சித்ரவதை செய்து படுகொலை செய்ததாகக் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இது சிவில் புகார் என்றாலும் மிக மிக முக்கியமான வழக்காகவே கருதப்படுகிறது. பட்டத்து இளவரசராக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்த வழக்கு தொடர்பாக அவர் கைதுசெய்யப்படலாம்; பிரதமர் பதவியில் இருக்கும்பட்சத்தில் அந்தப் பதவி மூலம் கைது நடவடிக்கையிலிருந்து அவர் தப்ப முடியும் என்றும் கூறப்படுகிறது.

சட்டபூர்வ பாதுகாப்பு

பிரதமர், அதிபர் போன்ற பதவி வகிக்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு இதுபோன்ற சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பைடன் அரசிடம் வாஷிங்டன் மாவட்ட நீதிபதி ஜான் பேட்ஸ் கோரியிருந்தார். ஜூலை மாதமே இதுகுறித்து விளக்கம் கேட்டிருந்த நிலையில், பைடன் அரசின் தரப்பு விளக்கமளிக்க தாமதமானதால் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீதிபதி ஜான் பேட்ஸ் அவகாசம் அளித்திருந்தார். அது பின்னர் அக்டோபர் 3 வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்தக் கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முகமது பின் சல்மான் கூறிவருகிறார். கஷோகிக்கும் மற்றவர்களுக்கும் இடையில் நடந்த கைலப்பின்போது எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார் என்பதுதான் சவுதி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம். ஆனால், கஷோகியின் உடல் கண்டம்துண்டமாக வெட்டப்பட்டது திட்டமிடப்படாமல் யதேச்சையாக நடந்த குற்றமாக இருக்காது என்று துருக்கியின் உளவு அமைப்புகளும், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-யும் கூறுகின்றன.

பட்டத்து இளவரசர்தான் என்றாலும் சவுதி அரேபியாவில் ஆட்சி நிர்வாகத்தை இப்போதே முகமது பின் சல்மான் தான் கவனித்துக்கொள்கிறார். இந்தச் சூழலில், அக்டோபர் 3-ல் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கவிருக்கும் நிலையில் அவசர அவசரமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவே சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவைப் பேணிவரும் தேசம் சவுதி அரேபியா. எனினும், கஷோகி படுகொலைக்குப் பின்னர் இரு தரப்புக்கும் இடையிலான உறவில் சற்றே விரிசல் ஏற்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. சவுதி பெண்கள் காரோட்ட அனுமதிக்கப்பட்டது, விண்வெளிக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருப்பது என முகமது பின் சல்மான் மேற்கொண்ட பல சீர்திருத்த நடவடிக்கைகள் பாராட்டப்பட்டாலும், அரசை விமர்சிப்பவர்கள், செயற்பாட்டாளர்கள், மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் போன்றோர் மீது கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் பின்னணியில் அவர் இருப்பதாகவே விமர்சிக்கப்படுகிறது.

பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவியான சவுதி அரேபியப் பெண் சல்மா அல்-ஷெஹாப், அரசு எதிர்ப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகளை பின்தொடர்ந்தது மற்றும் அவர்களது ட்வீட்களை ரீட்வீட் செய்த காரணத்துக்காகக் கைதுசெய்யப்பட்டு, 34 ஆண்டுகள் சிறைத் தண்டை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in